×

பொள்ளாச்சி அருகே மேற்கு புறவழிச்சாலை பணி நிறைவு

*விரைவில் பயன்பாட்டிற்கு திறப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே நிறைவடையும் தருவாயில் உள்ள மேற்கு புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர் பகுதி வழியாக வாகன போக்குவரத்து எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பால், சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு கோவை ரோடு சந்தேகவுண்டன்பாளைத்திலிருந்து குள்ளக்காபாளையம், அனுப்பர்பாளையம் வழியாக உடுமலை ரோடு திப்பம்பட்டி வரையிலும் கிழக்கு புறவழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சுமார் 5 ஆண்டுக்கு முன்பு மேற்கு புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த மேற்கு புறவழிச்சாலையானது கோவை ரோடு ஆச்சிப்பட்டி அருகே சக்திமில் பின்புறம் ஆரம்பித்து ஆ.சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், டி.நல்லிக்கவுண்டன்பாளையம், தாளக்கரை, நல்லூர் பிரிவு மீன்கரை ரோட்டை சென்றடையும் வகையில் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இதையடுத்து சுமார் மூன்றரை ஆண்டுக்கு முன்பு மேற்கு புறவழிச்சாலை பணி ஆரம்பிக்கப்பட்டது. கோவை ரோடு ஆச்சிப்பட்டி சக்தி மில் அருகே இருந்து, மீன்கரை ரோடு நல்லூர் பிரிவு வரையிலும் உள்ள சுமார் 9 கி.மீ தூரத்துக்கு அகலப்படுத்தப்பட்டு ஜல்லிகற்கள் பறத்திபோட்டு சமப்படுத்தப்பட்டது.

அதன் பின் புறவழிச்சாலையை அகலப்படுத்தும் பணியை விரைந்து நிறைவு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிபறத்தி போடப்பட்ட பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்பட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கு புறவழிச்சாலை பணி துரிதப்படுத்தப்பட்டது.

தற்போது ஒரு சில பகுதியில் மட்டும் நீரோடை உள்ளிட்ட பணி நடைபெறுகிறது. பெரும்பாலான பகுதியில் தார் ரோடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 98 சதவீத பணிகள் நிறைவடைந்து மேற்கு புறவழிச்சாலை பணி நிறைவடையும் தருவாயில் உள்ளதால், தற்போது அந்த வழியாக கிராமப்புறத்திலிருந்து வாகனங்கள் வந்து செல்கிறது. வாகனங்கள் இருபுறமும் சீராக சென்று வரும் வகையில் வெள்ளைகோடிடப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், நகர் பகுதியில் இடையூறு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் வகையில், நகர் பகுதிக்கு கனரக வாகனங்கள் வருவதை தவிர்க்க, வாகன ஓட்டிகளுக்கு வசதியாகவும், மேற்கு புறவழிச்சாலை பணியை விரைந்து நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைவில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி கோவை ரோடு ஆ.சங்கம்பாளையம் அருகேயிருந்து துவங்கும் மேற்கு புறவழிச்சாலையானது ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை வழியாக ஜமீன் ஊத்துக்குளியை சென்றடைகிறது.

சுமார் 9 கி.மீ தூரமுள்ள இந்த மேற்கு புறவழிச்சாலையானது ரூ.73 கோடியில் பணிகள் நடைபெற்று நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த சாலை பணியை அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் திறப்பு விழா காணப்படும்’’ என்றனர்.

Tags : Western Bypass ,Pollachi ,Coimbatore district ,
× RELATED ஆண்டிபட்டியில் ரூ.3.50 கோடியில் புதிய...