சிவகாசி, பிப்.27: பணம் தராத வாலிபர்களை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார். சிவகாசி அருகே 56 வீட்டு காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (30). இவர் தனது உறவினரான கண்ணன் (32) என்பவருடன் டூவீலரில் சிவகாசி அண்ணாவி தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி மகன் மகேந்திரகுமார் (எ) குள்ளமணி (35) மற்றும் 2 பேர் கார்த்திகேயன் வாகனத்தை வழி மறித்து தகராறு செய்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
தன்னிடம் பணம் இல்லை என்று கார்த்திகேயன் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரகுமார் தன்னிடம் இருந்த அரிவாளை கொண்டு கார்த்திகேயனையும் அவருடன் வந்த கண்ணன் என்பவரையும் தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த 2 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து மகேந்திரகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
