தவெக சார்பில் தொலைக்காட்சி விவாதங்கள், மக்கள் சந்திப்புகளில் எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல், முழுமையான தகவல் தெரியாமல் செல்லும் நிர்வாகிகள், தப்பும் தவறுமாக பேசுகின்றனர். மக்களுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள், எந்தவிதமான அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைப்பீர்கள் என்ற கேள்விக்கு கூட பதில் தெரியாமல் எதிர்க்கட்சிகளை திட்டத் தொடங்கிவிடுகின்றனர். இதனால் பொதுமக்களின் நகைப்புக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்த வீடியோ வெளியாகி, தற்குறிக்கூட்டம் என்று ஒவ்வொரு முறையும் நிரூபிப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். இதனால்தான் நேரடி விவாதத்தில் பங்கேற்கத் தடை விதித்து தவெக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக நடிகர் விஜய் சார்பாக தமிழக வெற்றிக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தலைமைக் கழக அனுமதியின்றி, மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.
பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்தவிதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும் விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
