ஈரோடு, பிப்.26: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் நேற்று முன்தினம் மொடக்குறிச்சி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள கறிக்கடை ஒன்றின் அருகில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை செய்வது தெரியவந்தது. விசாரணையில், நஞ்சை ஊத்துக்குளி அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (42) என்பவர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர். அவரிடமிருந்து, லாட்டரி எண்கள் எழுதப்பட்ட நோட்டு புத்தகத்தையும் பறிமுதல் செய்தனர்.
