×

சோழிங்கநல்லூரில் 6 மாடியில், 100 படுக்கை வசதியுடன் ரூ.66.50 கோடியில் புறநகர் மருத்துவமனை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சோழிங்கநல்லூரில் ரூ.66.50 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன், 100 படுக்கைகள், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுடன் கட்டப்பட்டுள்ள புறநகர் மருத்துவமனையை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜிவ்காந்தி சாலையில் விபத்தில் சிக்கும் நபர்களை, சென்னை அரசு பொது மருத்துவமனை அல்லது ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை இருந்தது. நீண்ட தூரம் மற்றும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையால், இவ்வாறு மருத்துவமனைக்கு அழைத்து செல்பவர்களில் பலர் உயிரிழக்கும் அபாயம் இருந்தது.

இப்பிரச்னைக்கு தீர்வாக, சோழிங்கநல்லூரில் அவசர சிகிச்சை பிரிவுடன் புறநகர் மருத்துவமனை அமைக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்தது. அதன்பேரில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் , சோழிங்கநல்லூரில் 100 படுக்கைகளுடன் நவீன கட்டமைப்பு வசதிகள் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவமனை கட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து சோழிங்கநல்லூரில் ரூ.66.50 கோடி செலவில் 1,01,773 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன், 100 படுக்கை வசதிகளுடன் புறநகர் மருத்துவமனை கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் புற நோயாளிகள் பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளும், முதல் தளத்தில் மகப்பேறு சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளும், இரண்டாம் தளத்தில் பச்சிளம் குழந்தைகள் பிரிவு மற்றும் ஆண்களுக்கான பொது மருத்துவம் ஆகிய பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, ஆய்வகம் மற்றும் பெண்களுக்கான பொது மருத்துவம் ஆகிய பிரிவுகளும், நான்காம் தளத்தில் தீக்காய சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளும், ஐந்தாம் தளத்தில் நீரிழிவு சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளும் என நவீன கட்டமைப்பு வசதிகள் கொண்ட மருத்துவமனையாக இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த புறநகர் மருத்துவமனை கட்டிடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம் மேடவாக்கம் ஊராட்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.76 கோடி செலவில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தையும் காணொலி காட்சி வாயிலாக துணை முதல்வர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், துணை மேயர் மகேஷ்குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், நிலைக்குழு தலைவர் விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Sholinganallur ,Chennai ,East Coast Road ,Rajiv Gandhi Road ,
× RELATED ‘வெற்றிவேல்’ யாருக்கு?