சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசனின் புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. சென்னையை சேர்ந்த ‘நீயே விடை’ என்ற பெயருடைய நிறுவனம் தனது புகைப்படம், பெயர், உலகநாயகன் என்ற படத்தையும், தனது பிரபல வசனத்தையும் தனது அனுமதியின்றி பயன்படுத்தி, டிசர்ட்களையும், சர்ட்களையும் விற்பனை செய்து வருவதாகக் கூறி நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரித்த உயர் நீதிமன்றம் வர்த்தக ரீதியில் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர் தரப்பில் யாரும் ஆஜராகாததால் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தடையை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
