மாமல்லபுரம், பிப்.24: மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையோரம் குப்பைகளை கொட்டி எரிப்பதால், புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை முக்கிய சாலையாகும். இச்சாலை, வழியாக பள்ளி – கல்லூரி வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த இளந்தோப்பு பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி சிலர் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி அவ்வபோது தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. இதுபோன்று அருகருகே தினமும் குப்பைகளை குவித்து வைத்து எரிப்பதால் சாலையில் முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில், நேற்றும் இளந்தோப்பு கிழக்கு கடற்கரை சாலையொட்டி குப்பைகளை கொட்டி சிலர் எரித்துள்ளனர். இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. சாலை தெரியாத அளவுக்கு புகைமூட்டம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். பெரும்பாலான வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை மெதுவாக ஓட்டிச் சென்றனர். வாகன ஓட்டிகள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் காரணமாக காரில் இருந்து இறங்கி நின்று விட்டு புகை கலைந்த பின் சென்றதை காணமுடிந்தது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சாலையோரம் குப்பைகளை கொட்டி எரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
