திருவனந்தபுரம்: சபரிமலையில் கொடிமரத்திற்கு நன்கொடையாக தங்கம் பெற்றதிலும் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, காணிக்கையாக தங்கம் வழங்கிய ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியது. விரைவில் நடிகர் மோகன்லாலிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
சபரிமலையில் அன்னதானத்திற்காக பக்தர்கள் வழங்கும் நன்கொடையில் தொடங்கி கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தை திருடியது, அபிஷேக நெய் விற்பனையில் மோசடி நடத்தியது என நாளுக்கு நாள் பல்வேறு மோசடிகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் சபரிமலையில் கடந்த 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட கொடிமரத்திற்காக பலரிடமிருந்து நன்கொடையாக பெற்ற தங்கத்திலும் மோசடி நடந்தது இதில் நடிகர் மோகன்லால், நடிகரும், ஒன்றிய இணையமைச்சருமான சுரேஷ் கோபி, நடிகரும், டைரக்டருமான ரெஞ்சி பணிக்கர், சினிமா தயாரிப்பாளர் சுரேஷ்குமார் உள்பட 27 பேர் கொடிமரத்திற்கு காணிக்கையாக தங்கம் கொடுத்தது தெரியவந்தது. ஆனால் இவர்களிடமிருந்து எவ்வளவு தங்கம் பெறப்பட்டது என்பது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டிடம் எந்த ஆவணங்களும் இல்லை. இது தொடர்பாக நன்கொடையாக தங்கம் கொடுத்தவர்களிடம் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியது. நடிகர் மோகன்லாலிடமும் விரைவில் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
