- ராகுல் காந்தி
- பஜ்ரங் தால்
- புது தில்லி
- வக்கீல் அகமது
- பாபா துணி கடை
- கோட்வார், உத்தரகண்ட்
- வக்கீல்
- அகமது
புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலம், கோட்வார் என்ற இடத்தில் பாபா துணி கடை என்ற பெயரில் துணி கடை நடத்தி வருபவர் வக்கீல் அகமது. கடந்த மாதம் வக்கீல் அகமது கடைக்கு வந்த பஜ்ரங் தள தொண்டர்கள் அந்த கடையின் பெயரை மாற்ற வேண்டும் என அவரிடம் கூறியுள்ளனர். இதற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து மீண்டும் அங்கு வந்த பஜ்ரங் தள தொண்டர்கள் கடையின் முன் போராட்டம் நடத்தினர். இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது வக்கீல் அகமதுவின் மகனின் நண்பரான ஜிம் அதிபர் தீபக் குமார் என்பவருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் தள தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது, தீபக்குமாரிடம், உன் பெயர் என்ன? என்று பஜ்ரங்தள தொண்டர்கள் கேட்க, அவர், நான் முகமது தீபக் என்று கூறி அவர்களை விரட்டினார். மதங்களுக்குள் மோதல் கூடாது என்பதை வலியுறுத்தி மோதலை தடுக்க இப்படி தன் பெயரை மாற்றிக் கூறியதாக பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று ஜிம் அதிபர் தீபக் குமார் என்கிற முகமது தீபக்கை சந்தித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இது குறித்து ராகுல் காந்தி தன்னுடைய பேஸ்புக் பதிவில் ஒவ்வொரு மனிதர்களும் சமமானவர்கள். இது தான் இந்தியத்தன்மை. இது அன்புக்கான கடை. உத்தரகாண்டை சேர்ந்த முகமது தீபக்கை சந்தித்து பேசினேன். அவரை போல் இளைஞர்கள் தேச பக்தியுடனும், தைரியமாகவும் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.முகமது தீபக் கூறுகையில், என்னை டெல்லிக்கு வருமாறு ராகுல் காந்தி அழைத்தார். அதன் பேரில் டெல்லி வந்து ராகுல் மற்றும் சோனியா காந்தியை சந்தித்தேன்.நீங்கள் நல்ல வேலையை செய்துள்ளீர்கள். உங்களுடைய ஜிம்மில் உறுப்பினராக சேர விரும்புகிறேன் என்று ராகுல் உறுதியளித்தார் என்றார்.
