×

விகேடி நான்கு வழி சாலை விரிவாக்க பணியால் பாசன வாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது கரைமேடு கிராமம். தற்போது கிடப்பில் போடப்பட்டிருந்த நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் மருவாய், கரைமேடு கிராம பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வாலாஜா ஏரியிலிருந்து விகேடி சாலையை கடந்து கிருஷ்ணாபுரம் பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த பாசன வாய்க்கால் மூலம் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் 500 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் விகேடி நான்கு வழி சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்கள் சாலை விரிவாக்க பணிக்காக பாசன வாய்க்காலை பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி வருகின்றனர்.

இதனால் வாலாஜா ஏரியில் இருந்து வரும் பாசனத்திற்கான தண்ணீர் வெளியேறி அருகிலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து தேங்கி நிற்பதால் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்க முடியாமல் இருந்து வருகின்றனர்.

மேலும் அதன் அருகே உள்ள குடியிருப்புகளுக்கும் இந்த தண்ணீரானது செல்வதால் குடியிருப்பு வாசிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாய விளைநிலங்களுக்கு செல்லும் பாசனத்திற்கான தண்ணீர் தடைப்படாமல் விவசாயிகளுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Tags : VKD ,SETHIATHOPU ,KARAMEDU VILLAGE ,Marwai ,Karamedu ,Vkady Road ,Lake Valaja ,
× RELATED ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும்...