×

தேன்கனிக்கோட்டை அருகே ஜன்னலை பெயர்த்தெடுத்து யானைகள் அட்டகாசம்

*ரோஜா நாற்றுகளை நாசப்படுத்தியதால் விவசாயிகள் அச்சம்

தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே வீட்டு ஜன்னலை உடைத்தும், வெள்ளரி மற்றும் ரோஜா நாற்றுகளை நாசப்படுத்தியும் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மரக்கட்டா பகுதியில் நேற்று முன்தினம் இரவு 3 காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள விவசாயி நாகராஜ்(50) என்பவரது வீட்டின் அருகே சென்ற யானைகள், திடீரென ஜன்னல் கதவை பெயர்த்தெடுத்து வீசின.

இதனால், நாகராஜின் குடும்பத்தினர் கதவை திறக்காமல் அச்சத்துடன் இருந்தனர். சிறிது நேரம் அங்கேயே உலாவிய யானைகள் திடீரென அருகில் உள்ள நாகராஜின் தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு, வெள்ளரி பயிரை சேதப்படுத்தி, பழங்களை தின்று நாசப்படுத்தின.

இதன் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் இருக்கும்.இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த திம்மராயன்(42) என்பவரது நர்சரி தோட்டத்திற்குள் யானைகள் புகுந்தன. அங்கு, நட்டு பராமரிப்பதற்காக வாங்கி வைத்திருந்த 1700 ரோஜா நாற்றுகளை துவம்சம் செய்தன.

இதன் மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம் இருக்கும். பின்னர், 3 யானைகளும் அங்கிருந்து மரக்கட்டா வனப்பகுதிக்குள் சென்றன. அதனை உறுதிபடுத்திக்கொண்ட விவசாயி நாகராஜ் தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் அளித்தார்.

இதன்பேரில், விரைந்து வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது விவசாயிகள் சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும், மரக்கட்டா பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை கர்நாடகாவுக்கு விரட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். யானைகள் அட்டகாசத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Marakata ,Krishnagiri district ,Thenkanikotte ,
× RELATED ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும்...