வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகரில் பத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் கால்நடை மருந்தகம், தனியார் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இந்நிலையில் பாரதி நகர் மூன்றாவது தெரு பகுதியில் உள்ள மின் கம்பம் ஒன்று எந்த நேரத்திலும் கீழே விழும் அளவிற்கு எலும்புக்கூடு போன்று காட்சியளிக்கிறது. இந்த மின் கம்பத்தில் உள்ள சிமென்ட் பூச்சு அனைத்தும் உதிர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் அனைத்தும் வெளியே தெரியும் அளவிற்கு காணப்படுகின்றன. இதனால் மின் கம்பத்தின் அருகாமையில் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் நாள்தோறும் அச்சமடைந்து வருவதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து பலமுறை வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை உடனடியாக மாற்ற மாவட்ட மின்வாரிய அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
