காரைக்கால், பிப்.20: புதுச்சேரி மாநிலத்தில் போலி மாத்திரை சம்பவத்தை தொடர்ந்து மருந்து தரக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையை எளிமைப்படுத்தும் வகையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மருந்து உற்பத்தியாளர்களும் தங்களது நிறுவனத்தில் காலாவதியான மருந்து மூலப்பொருட்கள், துணை பொருட்கள் மற்றும் காலாவதியான மருந்துகள் அழிக்கப்பட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மருந்து உற்பத்தி மட்டுமின்றி 3ம் தரப்பினரிடமிருந்து பெறப்பட்டவை குறித்த விவரங்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை மருந்து கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்துக்கு ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல் இமாசல் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரைமஸ் மருந்து நிறுவனம் தயாரிக்கும் பிரிம்கிளவ் ஊசி மருந்து, சோலன் மாவட்டத்தில் உள்ள பின்னாகிள் லைப் சயின்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பாராசிடமால் மாத்திரை (அசிடமோஸ் 500) போதிய தரம் இல்லாததால், விற்பனை செய்ய தடை விதித்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஆனந்தகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
