கரூர், பிப். 21: இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் கேரள மாநிலம் கொச்சியை தலைமையிடமாக கொண்டு இந்திய நறுமண பொருட்கள் வாரியம் செயல்பட்டு வருகிறது. ஏலக்காய், மிளகு, கிராம்பு, பட்டை, ஜவ்வாது, சாம்பிராணி ஆகிய நறுமண பொருட்களின் உற்பத்தி பெருக்கம், வர்த்தக நலன், ஏற்றுமதி வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதத்தில் இந்த வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்திய அளவில் இவ்வாரியத்தில் 23 உறுப்பினர்கள் கொண்டு செயல்படுகிறது.
தற்போது விஎம்சி குழும தலைவர் விஎம்சி.பாஸ்கர் நறுமண பொருட்கள் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட வர்த்தக சங்க செயலாளர் கே.எஸ்.வெங்கட்ராமன், துணைத் தலைவர் பால்ராஜ் லோகநாதன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நறுமண பொருட்கள் உற்பத்தியை பெருக்கவும், ஏற்றுமதி வணிகத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நறுமணப் பொருட்களின் புதிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஎம்சி.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
