×

நீடாமங்கலம் அருகே பயிர் விளைச்சல் போட்டி

*வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகே சித்தமல்லி கிராமத்தில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.நீடாமங்கலம் அருகில் உள்ள சித்தமல்லி கிராமத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி (2025-26) திட்டத்தின் கீழ் நெல் அறுவடை மற்றும் விளைச்சல் மதிப்பீட்டு பணிகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் ஊரக வேளாண்பணி அனுபவத்தின் கீழ் பயிலும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

அறுவடை செய்யப்பட்ட வயலில் மாணவர்கள் நேரடியாக களப்பணியில் ஈடுபட்டு பயிர் விளைச்சல் கணக்கீட்டு செயல்முறைகளை நடைமுறை அனுபவமாக கற்றுக்கொண்டனர்.

குறிப்பாக ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் தழைகள் எண்ணிக்கை, கதிர்கள் எண்ணிக்கை, ஒவ்வொரு கதிரிலும் உள்ள தானியங்களின் எண்ணிக்கை மற்றும் மொத்த விளைச்சல் அளவு ஆகியவற்றை அளவிட்டு பதிவுசெய்தனர். இந்த விவரங்கள் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டிக்கான தரவாக பதிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வுக்கு வேளாண்மை அலுவலர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். உதவி வேளாண் இயக்குநர் விஜயகுமார் மற்றும் துணை வேளாண் இயக்குநர் ஹேமா ஆகியோர் மற்றும் பிற துறை அலுவலர்கள் மாணவர்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினர். அவர்கள் பயிர் மதிப்பீட்டின் முக்கியத்துவம், சரியான கணக்கீட்டு முறைகள் மற்றும் அரசு திட்டங்களின் நோக்கம் குறித்து விளக்கமளித்தனர்.

விவசாயிகளின் உழைப்பையும், விளைச்சல் உயர்த்தும் நவீன முறைகளையும் நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி மூலம் அதிக விளைச்சல் பெறும் விவசாயிகளை ஊக்குவிக்கும் அரசின் முயற்சியை மாணவர்கள் பாராட்டினர்.

மொத்தத்தில், சித்தமல்லி கிராமத்தில் நடைபெற்ற இந்த அறுவடை மற்றும் விளைச்சல் கணக்கீட்டு நிகழ்வு மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தியதோடு அரசு திட்டங்களின் நடைமுறை அமல்பாட்டை புரிந்துகொள்ள உதவியாக இருந்தது என்றனர்.

Tags : Needamangalam ,Agriculture College ,Sidtamalli village ,Tamil Nadu ,
× RELATED தர்மபுரியில் பொதுமக்களிடம்...