வேலூர், பிப்.19: வேலூர் மாநகராட்சி முள்ளிப்பாளையம்-வசந்தபுரம் இடையே செல்லும் கானாற்றின் மீது கட்டப்படும் கல்வெர்ட் மற்றும் வசந்தபுரத்தில் அமைக்கப்படும் கழிவுநீரேற்று நிலையம் ஆகியவற்றை கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். வேலூர் மாநகராட்சி 4 மண்டலங்களில் அடங்கிய 60 வார்டுகளில் இருந்து பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் கழிவுநீர் அந்தந்த பகுதியில் உள்ள தொட்டிகளில் சேகரிக்கப்படுகிறது. தொட்டிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீர் விருதம்பட்டு பாலாற்றங்கரையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு கழிவுநீர் சுத்திகரித்து வெளியேற்றப்படுகிறது.
வேலூர், கஸ்பா, வசந்தபுரம் பகுதியில் ரூ 4 கோடி மதிப்பில் கழிவுநீரேற்றும் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதனை கலெக்டர் சுப்புலட்சுமி, மாநகராட்சி கமிஷனர் லட்சுமணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த கழிவு நீரேற்று நிலைய பணிகளை இந்த மாத இறுதிக்குள் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கு திட்ட இயக்குனர் அலாவுதீன், நீரேற்று நிலையத்திற்கு தேவையான அனைத்து இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது. சுற்றுச்சூழல் அமைக்கும் பணி முடிந்தவுடன் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார். அப்போது கலெக்டர் சுப்புலட்சுமி, கமிஷனர் லட்சுமணனிடம் கடந்த மூன்று மாதங்களாக எந்த பணிகளும் சரிவர நடைபெறவில்லை. வேலூர் மாநகராட்சி முழுவதும் சரிவர குடிநீர் வழங்கவில்லை என பல்வேறு புகார்கள் வருகின்றன. குறிப்பாக சாயிநாதபுரத்தில் கடந்த 13 நாட்களாக குடிநீர் வரவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். நானும் குடிநீர் வடிகால் வாரியத்திடம் பேசுகிறேன் என்று தெரிவித்தார்.
