×

9 திட்டப்பகுதியில் ரூ.696.55 கோடியில் 4035 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்: மார்ச் 2ல் முதல்வர் திறந்து வைக்கிறார்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடியில் கட்டப்பட்டு வரும் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அதை தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் கான்கிரீட் வீடுகளில் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கில் கலைஞரால் குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1970ம் ஆண்டு தொடங்கப்பட்டு கோட்டூர்புரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டது. மறுகட்டுமான திட்டத்தின் கீழ் இங்கு இருந்த 1476 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 1800 குடியிருப்புகள் தூண் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் வரும் மார்ச் 2ம் தேதி சென்னையில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாமஸ் ரோடு பகுதி 1 மற்றும் 2 திட்டப்பகுதியில் ரூ.77 கோடியே 75 லட்சத்தில் 470 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பெரிய பாளையத்தம்மன் கோயில் திட்டப்பகுதியில் ரூ.5 கோடியே 72 லட்சத்தில் 32 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சுபேதார் கார்டன் பகுதி 1 மற்றும் 2 திட்டப்பகுதியில் ரூ.57 கோடியே 32 லட்சத்தில் 300 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், அப்பாசாமி முதலி தெரு திட்டப்பகுதியில் ரூ.12 கோடியே 90 லட்சத்தில் 68 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுக்குட்பட்ட வன்னியபுரம் திட்டப்பகுதியில் ரூ.36 கோடியே 92 லட்சத்தில் 216 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், குயில் தோட்டம் திட்டப்பகுதியில் ரூ.65 கோடியே 2 லட்சத்தில் 384 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுக்குட்பட்ட கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் ரூ.307 கோடியே 24 லட்சத்தில் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், அப்பாவு நகர் சுப்புபிள்ளை தோட்டம் திட்டப்பகுதியில் ரூ.88 கோடியே 5 லட்சத்தில் 522 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், ராயபுரம் சட்டமன்றத் தொகுக்குட்பட்ட செட்டி தோட்டம் திட்டப்பகுதியில் ரூ.45 கோடியே 63 லட்சத்தில் 243 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், என மொத்தம் 9 திட்டப்பகுதியில் ரூ.696 கோடியே 55லட்சத்தில் கட்டப்பட்ட 4035 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைக்கிறார்.

மேலும் துணை முதல்வர் வரும் 28ம் தேதி சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் நகர் சிந்தாதிரிப்பேட்டை திட்டப்பகுதியில் ரூ.77 கோடியே 5 லட்சத்தில் 450 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், கொய்யாத்தோப்பு திட்டப்பகுதியில் ரூ.61 கோடியே 20லட்சத்தில் 324 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், காக்ஸ் குடியிருப்பு திட்டப்பகுதியில் ரூ.14 கோடியே 20 லட்சத்தில் 78 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 3 திட்டப்பகுதியில் ரூ.152 கோடியே 45 லட்சத்தில் 852 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைக்கிறார்.

கடந்த கால ஆட்சியில் 27628 குடியிருப்புகள் மட்டுமே கட்டப்பட்டது. முதல்வர் பொறுப்பேற்றது முதல் இன்று வரை ரூ.7932 கோடியே 79லட்சம் மதிப்பீட்டில் 66,755 குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. கடந்த கால ஆட்சியில் 6417 குடியிருப்புகள் மட்டுமே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த 5 வருடத்தில் 61,526 குடியிருப்புகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி.சிங் அடையாறு மண்டல குழு தலைவர் துரைராஜ், தலைமை பொறியாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Chief Minister ,Chennai ,Ministers ,T.M. Anparasan ,M.Subramanian ,Kotturpuram ,Tamil Nadu Urban Habitat Development Board ,Minister ,T.M. Anparasan… ,
× RELATED உன்னத திட்டங்களை செயல்படுத்தும்...