×

மாநில உரிமைகளை பாதுகாக்க முதல்வர் எடுக்கும் முயற்சிகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்: வீரபாண்டியன் அறிக்கை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய – மாநில உறவுகள் குறித்து அறிக்கை தயாரிக்க தமிழக அரசால், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு முதல் பகுதியை சமர்ப்பித்துள்ளது.  ஒன்றிய – மாநில உறவுகள் குறித்து தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட 4வது முக்கியமான ஆய்வு இது. ஏற்கனவே, ராஜமன்னார் குழு, சர்க்காரியா ஆணையம், பூஞ்சி ஆணையம் போன்றவை இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன.

இவ்வாய்வுகளுக்கு பிறகு, தற்போதைய ஒன்றிய பாஜ அரசு மாநில உரிமைகள் பறிப்பு நடவடிக்கையை பல்வேறு துறைகளிலும் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. “ஒரே தேசம் – ஒரே மொழி – ஒரே பண்பாடு” என ஒற்றை கலாச்சாரத்தை, ஒற்றை ஆட்சிமுறையை ஆர்எஸ்எஸ் சித்தாந்த அடிப்படையில் உருவாக்க முயல்கிறது. இத்தகைய போக்கை கருத்தில் கொண்டு, நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலை குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.

இந்தக் குழு அறிக்கையின் முதல் பாகமானது முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதை தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்வைத்துள்ளார் முதல்வர். நிதி, நிர்வாகம், வரி, கல்வி, மொழி உரிமை, மருத்துவம், வேலை வாய்ப்பு, சமூக நீதி, பண்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும், பன்முகத்தன்மையை பாதுகாக்கவும் முதல்வர் எடுக்கும் முயற்சிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Communist Party ,Chief Minister ,Veerapandian ,Chennai ,Communist Party of India ,State Secretary ,Tamil Nadu government ,Union ,Supreme Court ,Justice ,Kurian Joseph ,
× RELATED போலீஸ் தடையில்லா சான்று பெறாத...