பழநி, பிப். 18: பழநி நகரில் 33 வார்டுகள் உள்ளன. 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நகரில் தற்போது ரூ.120 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் நடந்து வருகிறது. பல வார்டுகளில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் பாதாள சாக்கடை நிறைவடைந்த வார்டுகளில் உள்ள சாலைகள் சீரமைக்கும் பணி தற்போது துவங்கி உள்ளது. இதற்காக ரூ.2.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிதியின் கீழ் வேல் மருத்துவமனை சாலை பின்புறம், சத்யாநகர் குறுக்கு தெரு, வஉசி மெயின் ரோடு, வஉசி குறுக்கு தெரு, உழவர் சந்தை சாலை, இஎஸ்ஐ மெயின் ரோடு, மகாலட்சுமி கோயில் தெரு, லட்சுமிபுரம் மெயின் ரோடு, ராஜேந்திர தெரு, பெரியார் சாலை, லயன்ஸ் கிளப் 1, 3, 4வது குறுக்கு தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன. இப்பணிகளுக்கான பூமிபூஜை நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் டிட்டோ, திமுக நகர செயலாளர் வேலுமணி, நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் பாஸ்கரன், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் முருகபாண்டியன், கவுன்சிலர்கள் சரவணன், பாபு, கலையரசி, முருகேசன், பத்மினி உள்பட பலர் கலந்து கொண்டனர். பழநி நகரில் சாலை சீரமைப்பு பணிகள் துவங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
