×

தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

தூத்துக்குடி,பிப் 18: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் இன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 123 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக வாயிற்கூட்டம் நடந்தது. டாஸ்மாக் ெதாழிற்சங்கத்தினர் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பணி நிரந்தரம், ஓய்வூதியம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 23 ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்கள் போராடி வருகின்றனர். ஆனால் தற்போது வரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே அரசு உடனடியாக இதில் தலையிட்டு டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (18ம் தேதி) தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 123 டாஸ்மாக் மதுபான கடைகளும் திறக்கப்படாது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. ஆனால் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் உயரதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

Tags : TASMAC ,Thoothukudi ,Chipcot ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்