×

எந்த அரசியல் கட்சியுடனும் எனக்கு தொடர்பு இல்லை: நயினாருக்கு திரிஷா கடும் கண்டனம்

நடிகரும், தவெக தலைவருமான விஜய், கடந்த 13ம் தேதி சேலத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பை நடத்தினார். இக்கூட்டத்தில் அவர் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ‘நடிகை திரிஷாவை விட்டு விஜய் வெளியே வரவேண்டும். வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்’ என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ‘மரியாதை குறைவான செயல்கள் எப்போதும் தட்டிக்கேட்கப்பட வேண்டியவை’ என்று குறிப்பிட்டு, தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: அரசியலில் மாநில அளவில் உயர் பதவி வகிக்கும் ஒருவரால் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்து வெளியிடப்படும் என்று எனது கட்சிக்காரர் எதிர்பார்க்கவில்லை. எனது கட்சிக்காரர் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புகொண்டவர் அல்ல. அத்தகைய தொடர்புகொள்ளும் நோக்கமும் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்கிறார். மேலும், கடந்த காலங்களில் தொடர்ந்து சொல்லி வந்தது போல், அரசியல் விஷயங்களில் அவர் எப்போதும் நடுநிலை போக்கையே பின்பற்றி வருகிறார்.

எனது கட்சிக்காரர் தனது கலைத்திறமையால் மட்டுமே அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறார். மிக முக்கியமாக, தனிப்பட்ட வாழ்க்கை ஒருபோதும் பொதுவிவாதத்தின் பொருளாக ஆக்கப்படக்கூடாது. உயர் பதவிகளில் உள்ளவர்கள் பொதுவிவாதத்தில் பொறுப்புணர்வு மற்றும் சமநிலையை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனது கட்சிக்காரரின் பெயரை அவருக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் இழுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* வாய் தவறி சொல்லிட்டேன் மன்னிச்சுடுங்க… அடங்கி போன நயினார்
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நெல்லையில் அளித்த பேட்டி: என்னுடைய அரசியல் வாழ்க்கையை பொறுத்தவரையில் எந்த ஒரு தனி நபர் விமர்சனத்தையும் நான் அனுமதிப்பதில்லை, நானும் பேசியதில்லை. அன்றைக்கு வாய் தவறி வந்த ஒரு வார்த்தை. அதுகுறித்து எங்களுடைய அகில இந்திய தலைவி வானதி சீனிவாசன் ஏற்கனவே என்னிடம் பேசியிருந்தார். முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டிற்கு சென்றேன். அவரும் இது குறித்து என்னிடம் பேசினார். உண்மையில் நான் பேசிய கருத்திற்கு யாரேனும் வருத்தப் படக்கூடிய சூழ்நிலை இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். நயினார் நாகேந்திரன் விமர்சனம் குறித்து தனது வக்கீல் மூலம் நடிகை திரிஷா அறிக்கை வெளியிட்ட சில மணி நேரங்களில் அவர் வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Trisha ,Nainar ,Daweka ,Vijay ,Salem ,Bajaj ,President ,Nayinar Nagendran ,
× RELATED சொல்லிட்டாங்க…