×

ஆர்.கே.பேட்டையில் கணவர் குடும்ப சித்ரவதையால் இளம்பெண் தற்கொலை: போலீசில் பெண்ணின் தாய் புகார்

 

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டையில் கணவர், மாமனார் மற்றும் நாத்தனார்களின் சித்ரவதையால் ஒரு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் நேற்று அப்பெண்ணின் தாயார் புகார் அளித்துள்ளார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி லதா மகேஷ்வரி (49). இவர்களது மகள் மோகனாஸ்ரீ (27), மகன் ரேவந்த்குமார் (24). மோகனாஸ்ரீ பி.காம் படித்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், திருநாதராஜபுரத்தைச் சேர்ந்த ராமானுஜம் என்பவரின் மகன் குணசேகரன் (35) என்பவருக்கு மோகனாஸ்ரீயைத் திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது குணசேகரன்-மோகனாஸ்ரீ தம்பதிக்கு ஆஷிகா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. மேலும், பெங்களூரில் குணசேகரன் வேலைக்கு செல்லும்போது, வீட்டில் மனைவி மோகனாஸ்ரீயை வைத்து, வெளியே தாழ்ப்பாள் போட்டு செல்வதும், மறுநாள் காலை வேலை முடிந்து வீடு திரும்பியதும் கதவைத் திறந்துவிடுவதும் வழக்கம்.

இதுகுறித்து தனது கணவர் குடும்பத்தினரிடம் மோகனாஸ்ரீ புகார் தெரிவித்ததால், அதுதொடர்பாகவும் தகராறு நிலவி வந்துள்ளது. மேலும், குணசேகரனின் சகோதரி பவுனு மற்றும் அவரது கணவர் நந்தகுமார் ஆகிய இருவரும் தலையிட்டு பிரச்னையை பெரிதாக்கி வந்துள்ளனர். இதற்கிடையே தனது கணவருக்கு போட்ட நகையை அடகு வைத்ததை மோகனாஸ்ரீ தட்டிக் கேட்டதால், அவரது முகத்தில் தலையணையை வைத்து கணவர் குடும்பத்தினர் அழுத்தியுள்ளனர். இதில் மோகனாஸ்ரீ அலறி சத்தம் போடவே உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே நாளுக்கு நாள் கணவர், மாமனார் மற்றும் நாத்தனார்களின் தொல்லை அதிகரித்ததால் தாய்வீட்டுக்குத் திரும்பியுள்ளார். எனினும், கடந்த 13ம் தேதி குணசேகரனின் உறவினர்கள் சமாதானம் பேசி மோகனாஸ்ரீயை அழைத்து சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து, கணவர் குடும்பத்தினரின் தொடர் சித்ரவதை தாங்காமல் நேற்று முன்தினம் மோகனாஸ்ரீ தனது சாவுக்கு கணவர் குணசேகரன், அவரது தந்தை ராமானுஜம் மற்றும் நாத்தனார்கள் செல்வி, தேவகி, பவுனு, அவரது கணவர் நந்தகுமார் ஆகியோர்தான் காரணம் என்று வாட்ஸ்அப் மூலம் தனது தாய்க்கு மெசெஜ் அனுப்பிவிட்டு, வீட்டுக்குள் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு மோகனாஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஆர்.கே.பேட்டைக்கு மோகனாஸ்ரீயின் தாயார் மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்துள்ளனர். மேலும், இதுகுறித்து ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் நேற்று செல்போன் ஆதாரங்களுடன் மோகனாஸ்ரீயின் தாய் லதா மகேஷ்வரி புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவர் குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : R.K.Petta ,R.K.Petta. ,R.K.Petta police station ,Karnataka ,
× RELATED மடப்புரம் கோயில் காவலாளி அஜித் கொலை...