சாயல்குடி, பிப்.16: சாயல்குடி அருகே பெட்டிக் கடைகளில் விற்கப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சாயல்குடியை அடுத்த கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் உள்ள பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக, சாயல்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்து.
இதையடுத்து, சாயல்குடி காவல் ஆய்வாளர் அன்னராஜ், தனிப்படை காவலர் முருகபூபதி உள்ளிட்டோர் சத்திரம் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இரண்டு பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதைத்தொடர்ந்து, கடலாடி வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி இந்தக் கடைகளின் உரிமையாளர்களான பாண்டி மனைவி வள்ளி, பாண்டித்துரை மகன் மாரிமுத்து ஆகியோருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தார்.
