குடியாத்தம்: திருவண்ணாமலை சிறுமி பலாத்கார வழக்கில், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இருந்து போக்சோ கைதி தப்பி ஓடிவிட்டார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலையை சேர்ந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால் பெங்களூருவில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். தற்போது 14 வயது சிறுமியாக உள்ள அவர், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஒரு பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி 10ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு சென்றபோது திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், அவரது பெற்றோர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து டாக்டர்கள் கொடுத்த தகவலின்பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் குடியாத்தம் வ.உ.சி தெருவை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான கமலேஷ்(22) என்பவர், சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று கமலேஷை கைது செய்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். பின்னர், நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது பணியில் இருந்த பெண் காவலரிடம் கமலேஷ், ‘தாகமாக உள்ளது. குடிக்க தண்ணீர் வேண்டும்’ என்று கேட்டுள்ளார். பெண் காவலர் தண்ணீர் கொண்டுவருவதற்குள் காவல் நிலையத்திலிருந்து கமலேஷ் தப்பி ஓடிவிட்டார். உடனடியாக போலீசார் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
தொடர்ந்து தப்பி ஓடிய போக்சோ கைதியை பிடிக்க தனிப்படை அமைத்து வேலூர் எஸ்பி சிவராமன் உத்தரவிட்டார். மேலும் பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
