×

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை இலவசமாக வழங்க வேண்டும்: டீன்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு

வேலூர், பிப்.16: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த நோயாளிகளுக்கு இலவசமாக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்க வேண்டும் என மருத்துவக்கல்லூரி டீன்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இதுதவிர்த்து இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு டாக்ரோலிமஸ் 1மிகி, டாக்ரோலிமஸ் 0.5மிகி, மைக்கோபெனோலேட் மொபெட்டில் 500மிகி, சைக்ளோஸ்போரின் 50மிகி, சைக்ளோஸ்போரின் 25.மிகி உள்ளிட்ட மருந்துகளை நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பொருளாதார வசதி உள்ளவர்கள் தனியார் மருந்தகங்களில், உயிர் காக்கும் மருந்துகளை பணம் செலுத்தி பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் போதுமான பொருளாதார வசதி இல்லாத நோயாளிகள், கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றனர். தனியார் மருந்தகங்களில் உயிர்காக்கும் மருந்துகள் வாங்க பொருளாதார நிலை தடையாக உள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட தகுதியுள்ள நோயாளிகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை இலவசமாக வழங்க, மருத்துவக்கல்வி இயக்குநரகம் சார்பில், தமிழக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது. இதனை கவனமாக பரிசீலனை செய்த தமிழக அரசு, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட தகுதியுள்ள நோயாளிகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வர்களுக்கு சுகாதாரத்துறையின் செயலாளர் செந்தில்குமார் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளுக்கு, மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்கு வரும்போது, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மருந்தகத்தில் வழங்கப்படும். தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள், சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் பரிந்துரையுடன், அரசு மருத்துவக்கல்லூரி டீனை அணுகி உத்தரவு பெற்றுக்கொள்ளலாம்.

தகுதியின் அடிப்படையில் மருந்துகள் வழங்குவதற்கான உத்தரவு ஒரு வருடம் செல்லுபடியாகும். நோயாளிகள் ஒவ்வொரு மாதமும் சம்மந்தப்பட்ட சிறப்பு மருத்துவமனைக்கு நேரில் வந்து, மருத்துவ சீட்டை காட்டி, மருந்துகளை வழங்க நிபுணரிடம் ஒப்புதல் பெற வேண்டும். நோயாளிகள் மருந்தகத்திற்கு சென்று மருந்து வழங்கும் பதிவேட்டில் கையொப்பமிட்டு மருந்துகளை பெற வேண்டும். மருந்துச்சீட்டில் ஏதேனும் மாற்றம் இருந்தாலோ அல்லது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகியிருந்தால் டீனிடம் புதுப்பிக்க வேண்டும். நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் இந்த மருந்து மாத்திரைகள் அனைத்தும், எந்த உச்சவரம்பும் இல்லாமல் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Health Department ,Vellore ,Directorate of Medical Education and Research ,Tamil Nadu… ,
× RELATED தொழிலாளி ெகாலையில் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைது கே‌.வி.குப்பம் அருகே