×

இரண்டு நாள் பயணமாக பிப்.24ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி வருகை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

நாகர்கோவில், பிப்.16: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக குமரி மாவட்டம் வருகை தருகிறார் என்று தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் முதலமைச்சர் வருகை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று பார்வையிட்டார். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள தியாகி பொன்னப்பநாடார் சிலை, அரசு விழா நடைபெறும் கன்கார்டியா பள்ளி மைதானம் ஆகியவற்றை கலெக்டர் அழகு
மீனாவுடன் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் 24-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகை தருகிறார். தூத்துக்குடி விமான நிலையம் வந்துவிட்டு அவர் நேராக கன்னியாகுமரி வந்து, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையினுடைய 25-வது ஆண்டு வெள்ளி விழா வளைவை திறந்து வைப்பார். பின்னர் அப்படியே கெஸ்ட் ஹவுஸ் போய் மதிய உணவு எடுத்துட்டு, சிறிது நேரம் முக்கியமான நபர்களை சந்திப்பார். அடுத்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துட்டு மாலையில் புறப்பட்டு நேராக மு.க.ஸ்டாலின் படைப்பகம், கலைஞர் சிலை திறப்புக்கு புத்தளம் செல்கிறார். அங்கிருந்து நாகர்கோவில் வந்து பொன்னப்பநாடார் சிலையையும் திறந்து வைக்கிறார்.

பொன்னப்பநாடார், தமிழ்நாடு முன்னாள் எதிர்க்கட்சி தலைவராக ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் இருந்தவர். சிலையை திறந்துவிட்டு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வெடுக்கிறார். காலை 9 மணிக்கு அரசு விழா. இங்கு பெரிய அளவில் பயனாளிகள் வருவார்கள். 25 ஆயிரம் பேர் வருவார்கள். அந்த மக்களை அவர் சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்குவார். அன்று முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல உள்கட்டமைப்புகள், ஐ.டி பார்க் உள்ளிட்ட பல பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைப்பார்.

பின்னர் நலத்திட்டங்கள், கலைஞர் கனவு இல்ல வீடுகள், மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு வழங்குதல் என பல நலத்திட்டங்களை தொடங்கி வைப்பார். மாற்றுத்திறனாளிகளுக்கு அக்டோபர் வரை வழங்கப்பட்ட உதவித்தொகை போக, மீதி உள்ளவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். நிகழ்ச்சி முடிந்ததும் அவர் தூத்துக்குடி வழியே சென்னை திரும்புவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Kumari ,Minister Mano Thangaraj ,Nagercoil ,Kumari district ,Tamil Nadu ,Dairy Minister ,Mano Thangaraj ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்