×

திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு; பெண் அதிரடி கைது: செல்போன் டவர் மூலம் சிக்கினார்

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். பெயின்டரான இவர், சென்னையில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி சுகன்யா(23). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில், பிரசவத்துக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சுகன்யாவை சேர்க்கப்பட்டு கடந்த 11ம் தேதி சுகன்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து தாய்க்கும் சேய்க்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுகன்யாவுக்கு உதவியாக அவரது சகோதரி பிரேமா இருந்துள்ளார். சுகன்யாவுக்கு பக்கத்து பெட்டில் மீனாட்சி என்பவர் 2 நாட்களாக படுத்திருந்தார். அவர் நான் 7 மாத கர்ப்பிணி. ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு காரணமாக சிகிச்சைக்கு சேர்ந்து இருப்பதாக கூறி கொண்டு சுகன்யா, பிரேமாவுடன் நட்பாக பழகி வந்தார்.

நேற்று காலை 7 மணிக்கு குழந்தைக்கு தடுப்பூசி போட அழைக்கிறார்கள் என்று மீனாட்சி கூறினார். இதனால் குழந்தையை தூக்கி கொண்டு பிரேமா செல்ல முயன்றபோது, ‘‘நீ சிரமப்பட வேண்டாம், நான் குழந்தையை தூக்கி சென்று தடுப்பூசி போட்டு வருகிறேன்’’ என்று மீனாட்சி கூறியுள்ளார். இதை நம்பிய பிரேமா, குழந்தையை மீனாட்சியிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். இதன்பிறகு மீனாட்சி நீண்டநேரமாக வரவில்லை என்றதும் சந்தேகம் அடைந்த பிரேமா, தடுப்பூசி போடும் இடத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு மீனாட்சியை காணவில்லை என்றதும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் சுகன்யா புகார் செய்தார். பிரசவ வார்டில் உள்ள பதிவேட்டை சோதனையிட்டனர். அதில் மீனாட்சி என்ற பெயரே பதிவாகவில்லை. இதனால் அவர் குழந்தையை கடத்த திட்டமிட்டு 2 நாட்களுக்கு முன் பிரசவ வார்டுக்கு வந்ததும், காலியாக இருந்த சுகன்யாவின் பெட்டுக்கு அடுத்த பெட்டில் படுத்து கொண்டு அவரிடம் நன்றாக பேச்சு கொடுத்து பழகியதும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது சுகன்யாவின் குழந்தையை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் மீனாட்சி ஏறிச் செல்வது பதிவாகி இருந்தது. மேலும் மீனாட்சியின் செல்போன் நம்பரை வைத்து சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் பதுங்கியிருந்த மீனாட்சியை பிடித்து சுகன்யாவின் குழந்தையை மீட்டனர்.

விசாரணையில், ‘‘தம்மம்பட்டி உப்போடை புதூரை சேர்ந்த சுரேஷ் மனைவி மீனாட்சி(38) என்பதும் இவருக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தில் குழந்தையை கடத்தி சென்றதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மீனாட்சியை கைது செய்து குழந்தையை மீட்டு தாய் சுகன்யாவிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட குழந்தையை 5 மணி நேரத்தில் மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Trichy government hospital ,Trichy ,Vignesh ,Thuraiyur North Street ,Trichy district ,Chennai ,Sukanya ,
× RELATED இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை...