×

சிஐஎஸ்எப் சைக்கிள் பேரணிக்கு மாமல்லபுரத்தில் வரவேற்பு

 

மாமல்லபுரம்: மத்திய தொழில் பாதுகாப்பு படையைச்(சிஐஎஸ்எப்) சேர்ந்த 33 பெண்கள் உள்ளிட்ட 130 வீரர்கள் வந்தே மாதரம் ‘சைக்களோ மாரத்தான்’ என்ற பெயரில் நாட்டின் கடலோர பாதுகாப்பினை வலியுறுத்தியும், மீனவ குப்பங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அவசியம் மற்றும் தீவிரவாதத்தை ஒழிக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணத்தை கடந்த ஜனவரி மாதம் 28ம் கொல்கத்தாவில் தொடங்கினர். ஒரிசா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் வழியாக 15 நாட்கள் கடந்து சென்னை வந்தனர்.

பின்னர், நேற்று காலை உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்திற்கு வந்தனர். கடற்கரை கோயில் முன்பு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், வீராங்கனைகள் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பிறகு, கல்பாக்கம் அணுமின் நிலையம் வழியாக சென்ற அவர்களுக்கு அணுமின் நிலைய அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதேபோல், கொக்கிலமேடு மீனவ பஞ்சாயத்தை சேர்ந்த குணசேகரன் தலைமையில், சிலம்பு கம்பு சுற்றியும், பூ மாலை அணிந்து, பட்டாசு வெடித்து வரவேற்றனர். ஒரு நாளைக்கு 120 முதல் 150 கி.மீ தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் வீரர்கள் மொத்தம் 6500 கிமீ தூரம் கடந்து கேரளாவில் நிறைவு செய்கின்றனர்.

Tags : CISF Cycle Rally ,Mamallapuram ,Central Labour Protection Force ,CISF ,Vande Mataram ,Cyclo Marathan ,
× RELATED 1.31 கோடி மகளிருக்கு தலா ரூ.5,000...