×

விஜய்யுடன் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி விமர்சனம் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு குவியும் கண்டனம்: திமுக, விசிக, அமமுக, தவெகவினர் கடும் எதிர்ப்பு

சென்னை: தவெக தலைவர் நடிகர் விஜய்யுடன், நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி விமர்சனம் செய்த பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. திமுக, விசிக, தவெகவினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள டிடிவி.தினகரன், ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் இந்த பேச்சுக்கு தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர். தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு பரப்புரை கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசுகையில், “எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவை எடப்பாடி வைத்துள்ளார். அண்ணா ஆரம்பித்த திமுகவை மு.க.ஸ்டாலின் வைத்துள்ளார். அடுத்தவர்கள் அட்ரஸில் அரசியல்வாதியாக இருக்கும் இவர்களுக்கு எல்லாம் ஒரு சவால். என்னைப் போல் தனியாக சொந்தமாக கட்சி ஆரம்பித்து குறைந்தபட்சம் ஒரு சதவீதம் வாக்கு வாங்கிக் காட்டும் தில் இருக்கிறதா? திராணி இருக்கிறதா? 30 ஆண்டுகளாக மக்கள் இயக்கமாக இருந்து மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்துள்ளோம்.

கூட்டணி கட்சிகளை மட்டும் நம்பியிருந்த 75 ஆண்டு கட்சி, 50 ஆண்டு கட்சி என ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டிருக்கும் இவர்களை எல்லாம் மீறி, இன்று களத்தில் தனியாக நின்று இந்த இரண்டே ஆண்டுகளில் முதன்மை சக்தியாக வளர்ந்து 30 சதவீதத்தைத் தாண்டி மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கும் நமக்கு அனுபவம் இல்லையா?. கொள்ளையடிப்பதில் எல்லாம் எங்களுக்கு அனுபவம் இல்லைதான். கொள்கையைப் பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது இதிலெல்லாம் எங்களுக்கு அனுபவம் இல்லைதான். சுட்டுப் போட்டாலும் வராது’’ என்றும் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து இருந்தார்.

இதுகுறித்து நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், “பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும். திரிஷா வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும். வெளியில் வந்தால் தான் எல்லாமே நடக்கும். குடும்பத்தோடு நல்லறவு வைக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். திரிஷா குறித்த பாஜ தலைவர் நாகேந்திரனின் கருத்துக்கு தவெக மற்றும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தனது எக்ஸ் தளம் பதிவில், “இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர், அரசியல் கருத்துகளை சொல்லும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசுவது அழகல்ல. பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரிக அரசியல் ஆகும்” என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

திமுக எம்பி கனிமொழி என்விஎன் சோமு தனது சமூக வலைத்தளம் பதிவில், ‘‘அரசியலில் ஈடுபட்டுள்ள ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பொதுவெளியில் விமர்சனம் செய்வது அநாகரிகம். அதிலும், அரசியலுக்கு சம்பந்தமில்லாத ஒரு பெண்ணின் மாண்பையும் கண்ணியத்தையும் இழித்துப் பேசுவது பெண்மையை களங்கப்படுத்தும் செயல் நயினார் நாகேந்திரனை பாஜவில் உள்ள பெண் தலைவர்களே கண்டிக்காமல் மவுனம் காப்பது அநீதி’’ என்று பதிவிட்டுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், ‘‘இதைப்பற்றி நான் என்ன கருத்து சொல்றது. இப்படி ஏன் அவர் பேசினார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும். இதில் நான் கருத்து சொல்வதில் ஒன்றுமில்லை. ஒரு தேசிய கட்சியின் தலைவர் இப்படி ஒரு கருத்தை சொல்வது சரியல்ல. இது ஏற்புடையதல்லை’’ என்றார்.

தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், ‘‘பாஜலாம் ஒரு கட்சியா. நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா’’ என்று கூறினார். செங்கோட்டையனின் இந்த பேட்டி தவெகவினரால் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறுகையில், ‘‘பாஜவின் தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் குறித்து கேட்ட கேள்விக்கு, அதற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத முறையில் நடிகை திரிஷாவை அவமதித்து, இழிவுபடுத்தும் நோக்கில், தரம் தாழ்ந்து பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆர்எஸ்எஸ் பெண்களை இழிவுபடுத்தி, அடிமைகளாக நடத்த வேண்டும் என்பதுதான், இந்து தர்ம சாஸ்திரங்கள் கற்றுக் கொடுப்பதாக போதித்து வருகிறது. அதன் அரசியல் பிரிவான பாஜவும் பெண்களை இழிவுபடுத்தும் சம்பவங்கள் நாடெங்கும் பரவலாக நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரனின் வன்ம பேச்சும் அமைந்துள்ளது. பாஜவிடம் அரசியல் வறட்சியும், வெறுப்பும் நிரம்பி வழிவதால், அவர்களிடம் ஆரோக்கிய அரசியலை எதிர்பார்க்க முடியாது. பெண்களை கண்ணியக் குறைவாக பேசும் பாஜவுக்கும், அதன் தலைவர்களுக்கும், கூட்டாளிகளுக்கும் எதிர்வரும் தேர்தலில் பெண்கள் கடுமையான தண்டனை வழங்கி பாடம் கற்பிக்க வேண்டும்’’ என்று தெரிவித்து உள்ளார்.

தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறுகையில், ‘‘ஒரு தேசியக் கட்சியின் மாநில தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார். 4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. கடந்த தேர்தலில் கட்டைப்பையில் கட்டுக் கட்டாகப் பணம் தூக்கித் திரிந்த நாகம், இன்று ஊருக்கு உபதேசம் செய்வதா? பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் நீங்கள், வரம்பு மீறி விமர்சனம் செய்தால், தமிழகப் பெண்கள் திருப்பித் தரப்போகும் பதிலடிகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதேபோல பாஜ கூட்டணியில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அளித்த பேட்டியில், ‘‘தனிப்பட்ட விமர்சனங்களை அனைவரும் தவிர்க்க வேண்டும். நயினார் நாகேந்திரன் பொதுவாக பேசக்கூடியவர் அல்ல. நான் அதை பார்க்கவில்லை. தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்பது தான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில், ‘‘தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் மரியாதைக்குரியவை. ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி பாணி இருக்கிறது. நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து. அதற்கு அவர் தான் பதிலளிக்க வேண்டும்’‘ என்றார்.

இதே போல பல்வேறு தரப்பிலும் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அதே நேரத்தில் பெண்களை இழிவாக பேசினால் கொதித்து எழும் பாஜவின் தலைவர்களான ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் மவுனம் காத்து வருவது ஏன்?. அவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Tags : Trisha ,Vijay ,Nayinar Nagendran ,Dimuka ,Visika ,Amamuka ,Davekavinar ,Chennai ,Bhajha ,Davekhavi ,DTV ,ECCENTRIC ,ALLIANCE ,Dinakaran ,G. K. ,
× RELATED மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்: பாமக தலைவர் அன்புமணி