கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த 7 முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று மகளிர் உரிமை தொகை. இந்த திட்டத்தின்படி மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் திமுக சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியமைத்த பின், 2023 செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாளில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அப்போது இது உதவி தொகை அல்ல, உரிமை தொகை என்று முதல்வர் கூறினார்.
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளின் உழைப்பை அங்கீகரிக்கவும், அவர்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும், வறுமையை ஒழித்து வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், பெண்கள் குடும்பத்தில் தற்சார்புடன் வாழவும், சுயமரியாதையுடன் செயல்படவும் இந்த திட்டம் வழிவகுக்கும் என்று அப்போது கூறப்பட்டது. ஒன்றிய அரசு உரிய நிதியை தமிழகத்துக்கு தராத நிலையிலும், பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது. இது பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. முதலில் தமிழகம் முழுவதும் 1 கோடியே 13 லட்சம் பேருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டது. பின்னர் கடந்தாண்டு டிசம்பரில் விடுபட்டவர்களையும் சேர்த்து 1 கோடியே 31 லட்சம் பேருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இம்மாதம் மகளிர் உரிமை தொகை வரும் 15ம் தேதி தான் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால் நேற்று காலை யாரும் எதிர்பாராத வகையில், மகளிர் உரிமை தொகை பெறும் பெண்கள் அதிர்ச்சி அடையும் வகையில் அவர்களுடைய வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது. செல்போனில் வந்த குறுஞ்செய்தியை பார்த்து பலரால் நம்பவே முடியவில்லை. இந்த நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், வீடியோ ஒன்றை வெளியிட்டு, ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமை தொகை வழங்குவதை தடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதால், ஏப்ரல் வரைக்குமான தொகை ரூ.3,000 வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோடை கால சிறப்பு தொகையாக ரூ.2,000 கூடுதலாக வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி காரணமாக 1.31 கோடி மகளிர் பயனடையும் இந்த திட்டத்தை மூன்று மாதங்கள் நிறுத்தி வைத்தால் நீங்கள் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாவீர்கள் என்பது, உங்கள் வீட்டில் ஒருவராக உள்ள எனக்கு நன்றாகவே தெரியும். இதையெல்லாம் எண்ணி பார்த்துதான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைக்கேட்டு திட்ட பயனாளிகள் குதூகலமடைந்தனர். இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், ‘‘திமுக அரசு செயல்படுத்தும் திட்டங்களில் முக்கியமானது மகளிர் உரிமை தொகை.
இது பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற திட்டம். எனவே தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியலுக்காக இந்த திட்டத்தை எதிர்க்கட்சிகள் முடக்க முயலலாம் என்பது உண்மை. எனவே முதல்வர் சரியான நேரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். ஒரே நாளில் வழங்கப்பட்ட ரூ.5,000, குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவுக்கு உதவும். குறிப்பாக ரம்ஜான் நெருங்கி வரும் நேரத்தில் இஸ்லாமிய குடும்பத்தினர் புத்தாடை எடுக்க பேருதவியாக இருக்கும். இது கண்டிப்பாக வரும் தேர்தலில் மாயாஜாலத்தை நிகழ்த்தும். இதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும். கடந்த 1 மாதத்தில் மட்டும் பெண்களுக்கு அரசு ரூ.9,000 வழங்கி உள்ளது. இதனால் பெண்கள் குதூகலத்தில் உள்ளனர்’’ என்றனர்.
