×

தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ரெடியான பாஜ குழு

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேர்தல் தொடர்பான பணிகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைக்க 7 பேர் கொண்ட தேர்தல் மேலாண்மைக் குழுவை கட்சித் தலைமை அமைத்துள்ளது. இந்தக் குழுவிற்குத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்குகிறார். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் இணைந்து பணியாற்ற 6 இணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் எஸ்.ஆர். சேகர் (மாநிலப் பொருளாளர்), ஆர்.என். ஜெயப்பிரகாஷ் (மாநிலத் துணைத் தலைவர்), மா. வெங்கடேசன் (மாநிலத் துணைத் தலைவர்) மாலா செல்வக்குமார் (மாநிலப் பொதுச் செயலாளர் – ஓபிசி அணி), எஸ்.ஆர். ராமப்பிரியன் (கட்சி நிர்வாகி) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவின் மூலம் கட்சியின் தேர்தல் பணிகள் மிகவும் நெறிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு மற்றும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும். பாஜ போட்டியிடும் தொகுதிகளுக்குமான தகுதியான வேட்பாளர்களைப் பரிசீலித்துத் தலைமைக்குப் பரிந்துரைக்கும். தமிழக மக்களின் தேவைகளை உள்ளடக்கிய சிறப்பான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும். தேசியத் தலைவர்களின் சுற்றுப்பயணங்கள் மற்றும் மாநில அளவிலான பிரசாரங்களை ஒருங்கிணைக்கும். கடந்த காலங்களில் தேர்தல் பணிகளில் நிலவிய சில குழப்பங்களைத் தவிர்க்கவும், முடிவுகளை விரைவாக எடுக்கவும் இந்தச் சிறிய அளவிலான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அனுபவம் வாய்ந்த தலைவரான பொன். ராதாகிருஷ்ணன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது, கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வகையில் இந்தக் குழு முழுவீச்சில் செயல்படும் என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் நாகர்கோவில் அல்லது பத்மநாபபுரம் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கட்சியில் தேர்தல் பணிகளை கவனிக்க புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

* எடப்பாடி இன்…! சிவராத்திரி அவுட்…!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அதிமுக சார்பில், ‘‘மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம்’’ என்ற தலைப்பில் தொகுதி வாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று (ஞாயிறு) மாலை ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் பகுதியில் எடப்பாடி பங்கேற்கும் பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. இன்று (ஞாயிறு) மகா சிவராத்திரி தினம் என்பதால் பெரும்பாலான மக்கள் சாமி தரிசனத்திற்காக கோயில்களுக்கு செல்வது வழக்கம். இதற்கு, அதிமுக தொண்டர்களும் விதிவிலக்கு அல்ல. இந்நிலையில், எடப்பாடி பிரசாரத்திற்கு வருவதால் அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ‘‘இவரு வேற உள்ளே வந்து… சிவராத்திரியை முடிச்சிருவாரு… போல…’’ என அக்கட்சி தொண்டர்களே புலம்புகின்றனர்.

Tags : BJP ,Bharatiya Janata Party ,2026 assembly elections ,Tamil Nadu ,
× RELATED மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்: பாமக தலைவர் அன்புமணி