×

சேலத்தில் நடந்த கூட்டத்தில் விஜய்யை பார்க்க வந்த தொழிலாளி தற்கொலை

சேலம்: சேலத்தில் நடந்த தவெக கூட்டத்தில் விஜய்யை பார்க்க வந்த வெல்டிங் பட்டறை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் மேட்டூர் கருமலைக்கூடலை சேர்ந்தவர் முருகன் (52). வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். முருகனுக்கு புற்றுநோய் இருந்தது. இதற்காக சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றுமுன்தினம் அவர் வீட்டில் இருப்பவர்களுக்கு தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு சேலத்திற்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது, சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடந்த தவெக கூட்டத்தில் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில், எருமாபாளையம் பகுதியில் உள்ள ஒரு மெஸ் முன்பு அவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் வந்து உடலை மீட்டு விசாரித்தனர். அதில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. மேலும், அவர் சட்டைப்பைக்குள் இருந்த மருந்துசீட்டின் பின்பகுதியில், ‘‘எனக்கு புற்றுநோய் உள்ளது. இதற்கு சிகிச்சை பெற அதிகளவு செலவாகும். அந்த அளவுக்கு எனக்கு வசதியில்லை. இதனால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனவே எனது குடும்பத்தினர் நடிகர் விஜய்யை பார்த்து உதவி கேளுங்கள்,’’ என்று எழுதி இருந்தார். இதையடுத்து போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vijay ,Salem ,Thaveka ,Murugan ,Karumalakoodal, Mettur, Salem district ,
× RELATED தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் தொடர்பான இறுதி...