கூடலூர்: கூடலூர் அருகே 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையை கடந்து சென்றதை சுற்றுலா பயணிகள் படம்பிடித்து மகிழ்ச்சி அடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரத்தில் கடும் வெயில் அதிகாலையில் பணிப்பொழிவு காரணமாக வனப்பகுதிகளில் உள்ள புல்வெளிகள் காய்ந்து வருகின்றன. மேலும் நீராதார பகுதிகளிலும் நீர் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தண்ணீர், உணவு தேடி யானைகள் கூட்டமாக வனப்பகுதிகளில் இடம் பெயர்ந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து கேரள மாநிலம், சுல்தான்பத்தேரி- மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து முத்தங்கா சரணாலய வனப்பகுதிக்குள் சுமார் 20க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக சென்றன. சாலையை கூட்டமாக யானைகள் கடந்து செல்லும் காட்சியை அந்த வழியாக வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

