×

திருவிக நகர், பெரம்பூரில் வளர்ச்சி பணிகள் ஆய்வு; பால்வாடி குழந்தைகளுக்கு பவளவிழா கட்சி பதில் சொல்லாது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

 

பெரம்பூர்: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ், சிஎம்டிஏ சார்பில் திருவிக நகர், ஓட்டேரி, பெரம்பூர், ஜமாலியா, மங்களபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் மற்றும் முதல்வர் படைப்பக கட்டுமானப் பணிகளை இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், இம்மாதம் 20க்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இவை அனைத்தும் முதல்வரின் சிந்தையில் ஒளித்திட்ட மகத்தான திட்டம். மாணவர்களின் படிப்பில் தேர்ச்சி வீதம் குறைவாக இருக்கிற சூழலை முழுமையாக அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு விஷயங்களை நினைவில் கொண்டு திட்டங்கள் தீட்டப்பட்டு, தற்போது அப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், தமிழகத்தில் போக்குவரத்து கழகம் துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, அனைத்து பணிமனைகளையும் புதிதாக கட்டுவது, விளையாட்டு மைதானங்கள் கட்டுவது, சலவை தொழிலாளர்களுக்கு சலவை கூடங்களைப் புதுப்பித்து கட்டுதல் உள்பட 20க்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களை வரும் 25ம் தேதிக்குள் மக்களின் பயன்பாட்டுக்கு முதல்வர் துவக்கி வைக்கிறார். ஒன்றிய அரசு திட்டங்களுக்கு கோட்சே உள்பட எந்த பெயர் வைத்தாலும் அதிமுகவினர் கவலைப்பட மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் அமித்ஷாவிடம் ஒட்டுமொத்தமாக அதிமுக அடிமை சாசனத்தை ஒப்படைத்துவிட்டனர். அவர்களின் இருப்பிடத்தைத் தக்கவைத்து கொள்ள, எதை பற்றியும் கவலைப்பட மாட்டார்கள்.

திமுக தனித்து நின்றால் 22 சதவீத வாக்குதான் என ஆதவ் அர்ஜுனா கூறியது தொடர்பான கேள்விக்கு, பால்வாடி குழந்தைகளுக்கு பவள விழா கண்ட கட்சி பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. திமுக, ஒரு எஃகு கோட்டை. ஆட்சி அதிகாரத்தை பற்றி கவலைப்படாத கோட்டை. எங்களுக்கு கொள்கை என்பது, இடுப்பில் கட்டிய வேட்டி போல். பதவி என்பது, தோளிலே போட்ட துண்டு போல. வேட்டியா, துண்டா என வரும்போது, கொள்கை சார்ந்த வேட்டிதான் முக்கியமானது. அவர்களை போன்றவர்களுக்கு பதில் சொல்லி, அரசியல் களத்தை நான் களங்கப்படுத்த விரும்பவில்லை என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். இந்த ஆய்வில் தாயகம் கவி எம்எல்ஏ, மேயர் பிரியா, மண்டல குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvika Nagar ,Perampur ,Coral Festival Party ,Balwadi ,Minister P. K. ,Sekarpapu ,Cmda ,Oteri ,Jamalia ,Mangalpuram ,Minister P. K. Sekarpapu ,
× RELATED பனையூர் பண்ணையாரே.., அப்பா-வால சினிமா...