×

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகளை விளையாட அனுமதிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை விளையாட அனுமதிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மைதானத்தில் 35,000 பார்வையாளர்கள் வரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் தொடங்குவதற்கு முன்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் அதன் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. பெங்களூருவின் அடையாளமாகத் திகழும் எம். சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை கர்நாடக அரசு தற்போது நீக்கியுள்ளது. இதன் மூலம், வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தனது சொந்த மண்ணிலேயே போட்டிகளை விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, ஜூன் 4-ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் ஒரு பிரம்மாண்டமான வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது சமூக வலைதளங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டதால் மைதானத்திற்கு வெளியே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. அப்போது ஏற்பட்ட பயங்கரமான நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த மைதானத்தில் போட்டிகள் நடத்த அரசு தடை விதித்திருந்தது.

இந்தத் தடையின் காரணமாக சின்னசாமி மைதானத்தில் நடைபெற வேண்டிய மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் கூட நவி மும்பைக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில், பிப்ரவரி 12 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சில நிபந்தனைகளுடன் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்துத் தெரிவித்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி, மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 35,000 ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற முக்கியமான நிபந்தனையுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் வெங்கடேஷ் பிரசாத் இதற்காக அரசுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தார். ஒருவேளை பெங்களூருவில் அனுமதி கிடைக்காவிட்டால், நவி மும்பையின் டி.ஒய் பாட்டீல் மைதானம் அல்லது ராய்ப்பூர் மைதானத்தை தனது ஹோம் கிரவுண்டாகப் பயன்படுத்த ஆர்சிபி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. தற்போது அரசு அனுமதி கிடைத்துள்ளதால், நடப்புச் சாம்பியனான ஆர்சிபி அணி தனது சொந்த ரசிகர்களின் முன்னிலையில் களம் காணத் தயாராகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Tags : KARNATAKA CABINET ,IPL ,BANGALORE ,SINNASAMI ,CRICKET STADIUM ,Karnataka ,Bangalore Sinnasamy Cricket Ground ,Royal Challengers Bangalore ,
× RELATED பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு அனுமதி!