×

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா பிப்.23ல் கொடியேற்றம்

நத்தம், பிப். 13:திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள மாரியம்மன் கோயில், தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலின், மாசிப் பெருந்திருவிழா வரும் 23ம் தேதி, காலை 8.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து பிப். 24ம் தேதி அதிகாலை பக்தர்கள் உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் சென்று அங்கு புனித நீராடி, தீர்த்தக் குடங்களுடன் சந்தனக் கருப்பு சுவாமி கோயிலில் வந்து ஒன்று கூடுவர்.

அவர்களை அங்கிருந்து மாரியம்மன் கோயிலுக்கு மேளதாளம் முழங்க, வர்ணக்குடை, தீவட்டி பரிவாரங்களுடன் ஊர்வலமாக அழைத்துச் செல்வர். பின்னர் பக்தர்கள் அங்கு அம்மன் உருவம் பொறித்த மஞ்சள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்குவர். அன்றிரவு அம்மன் குளத்திலிருந்து கம்பம் எடுத்து வரப்பட்டு, கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்படும்.

விழா நாட்களில் பிப்.27ம் தேதி மயில் வாகனம், மார்ச் 3ம் தேதி சிம்ம வாகனம், 6ம் தேதி அன்ன வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி மின்ரதத்தில் நகர்வலம் வரும் நிகழ்வு நடக்கும். மார்ச் 8ம் தேதி பக்தர்கள் பால்குடம் எடுத்தல், மார்ச் 9ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை சாட்டுதல் நிகழ்ச்சிகளும் நடைபெறும். தொடர்ந்து மார்ச் 10ல் அதிகாலை பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தல், காந்திநகர் பொதுமக்களால் கழுகு மரம் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

பிற்பகலில் காமராஜ் நகர் பொதுமக்களால் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியை தொடர்ந்து கோயில் முன் அமைக்கப்பட்டிருக்கும் பூக்குழியில் பக்தர்கள் இறங்குவர். தொடர்ந்து அன்றிரவு கம்பம் கோயிலிலிருந்து எடுத்துச் சென்று அம்மன் குளத்தில் விடப்படும்.

தொடர்ந்து மார்ச் 11ம் தேதி காலையில், அம்பாள் மஞ்சள் நீராடுதலைத் தொடர்ந்து மாரியம்மன் அன்றிரவு சர்வ அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி, அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு இரவு முழுவதும் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்து கோயிலைச் சென்றடைவதுடன் திருவிழா நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் பரம்பரை பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 

 

Tags : Natham Mariamman Temple Masip Perundhiru Festival ,Natham ,Mariamman Temple ,Natham, Dindigul district ,South Tamil Nadu ,Masip Perundhiru Festival ,Uluppakudi ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்