×

பழநி கோயில் ஸ்பீக்கரில் விஜய் பாடல் ஒலிபரப்பு: தவெக தொண்டர் மீது நடவடிக்கை கோரி புகார்; கோயில் புனிதத்தை கெடுப்பதாக பக்தர்கள் கொதிப்பு

பழநி: பழநி கோயில் அறிவிப்பு ஸ்பீக்கரில் விஜய் பாடலை ஒலிக்க விட்ட தவெக தொண்டர் மீது கோயில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில், தைப்பூச விழா கடந்த ஜன. 26ம் தேதி துவங்கி பிப். 4ம் தேதி வரை நடந்தது. இத்திருவிழாவின் போது சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பழநி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதையில் வரும்போது நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக காவல்துறை சார்பில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

அந்த இடங்களில் பக்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குவதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டிருந்தன. யானைப்பாதை, படிப்பாதை அடிவாரம், கிரிவீதி பகுதிகளில் இந்த ஸ்பீக்கர்கள் அதிகளவு பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்பீக்கரில் பக்தர்கள் தவறவிடும் உடமைகள், பொருட்கள், காணாமல் போகும் குழந்தைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்த அறிவிப்புகளும், பூஜை விபரங்களும் தெரிவிக்கப்படும். பழநி மலைக்கோயிலுக்கு சென்ற தவெகவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், படிப்பாதையில் உள்ள ஸ்பீக்கரில் தனது செல்போனை இணைத்து அதில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்த திரைப்பட பாடல்களை ஒலிக்கச் செய்துள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றமும் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோயிலில் உள்ள ஒலிப்பெருக்கியில் செல்போனை இணைத்து திரைப்பட பாடல் ஒலிக்க வைத்த இளைஞர் யார் என்று அடையாளம் கண்டு, அவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பழநி கோயில் நிர்வாகம் சார்பில், அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இப்புகாரின் அடிப்படையில் போலீசார் முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளனர். கோயில் வளாகத்தில் நடந்த விஜய் ரசிகரின் அத்துமீறல் பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘‘பழநி மலைக்கோயில் தரிசனத்தில், முருகன் பாடல்களை கேட்டுக்கொண்டே படியேறுவது, தரிசனத்துக்கு செல்வது அற்புத அனுபவமாக இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் இப்படியா சினிமா, கட்சிப்பாடல்களை ஒலிபரப்புவது? கோயிலின் புனிதத்தை கெடுக்கும் இதுபோன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Vijay ,Palani ,Thaveka ,Dindigul district ,Thandayutapani ,Swamy Hill Temple ,Thaipusam festival ,
× RELATED பெங்களூரில் இருந்து கடத்தி வந்து...