நெல்லை, பிப். 13: நெல்லை – திருச்செந்தூர் ஓடும் ரயிலில் பெண் பயணியை மிரட்டி நகை பறித்த வாலிபருக்கு நெல்லை நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சென்ற ரயிலில் அபிநயா என்பவர் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயணம் செய்தார். அப்போது அவரை மர்ம நபர் மிரட்டல் விடுத்து அபிநயா கழுத்தில் அணிந்திருந்த 10 கிராம் நகையை பறித்துச் சென்றார். இதுகுறித்து நெல்லை ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தேவர்குளம் வடக்கு தலைவன்பட்டியைச் சேர்ந்த விஜய் (25) என்பவர் நகையை பறித்தது தெரிய வந்தது. போலீசார் விஜயை கைது செய்து அவரிடம் இருந்து மூன்றரை கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நெல்லை 4வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்தது. நெல்லை ரயில்வே இன்ஸ்பெக்டர் செல்வி, எஸ்ஐ ராமகிருஷ்ணன் ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் குற்றம் சாட்டப்பட்ட விஜய்க்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மகிழ்வண்ணன் ஆஜரானார்.
