கோவில்பட்டி, பிப்.13: கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளஞ்சிறாரை போலீசார் பிடித்து கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிழக்கு காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து எஸ்ஐ சந்தனமாரி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த சாலையில் உள்ள கோயில் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சிறுவனை பிடித்து போலீசார் விசாரிக்க முயன்றனர். அதற்கு அந்த சிறுவன் போலீசாரை அவதூறாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், போலீசார் சிறுவனை பிடித்து சோதனையிட்டபோது, அவரிடம் சுமார் 100 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர், 17 வயது சிறுவன் என்பதும், பள்ளியில் பிளஸ்2 படித்து வருவதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவனை பிடித்து, கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
