×

மாற்றுத்திறனாளிகள் மறியல்

 

தூத்துக்குடி, பிப். 13:தூத்துக்குடியில் மறியல் செய்ய முயன்ற 122 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர். தமிழக அரசு சாதாரண ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500, கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறது. இந்த உதவி தொகையானது மருந்து, உணவு, விலைவாசி உயர்வுக்கு ஏற்றார் போல் இல்லை. ஆந்திராவில் சாதாரண ஊனமுற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.6 ஆயிரம், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

அதேபோன்று தமிழ்நாட்டிலும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளிகள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். அதன்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் பொருளாளர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் செயலாளர் ஜெபஸ்டின் ராஜ், மாநில குழு உறுப்பினர் சாலமன் ராஜ் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த புதுக்கோட்டை போலீசார், மறியலில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் 122 பேரை கைது செய்தனர்.

Tags : Thoothukudi ,Tamil Nadu government ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்