புதுடெல்லி: போலி திருமணத்தை மறைத்து விவாகரத்து பெற முயன்ற தம்பதி மற்றும் வழக்கறிஞருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களுக்கு இடையேயான திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்கக் கோரி குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களின் திருமணத்தின் போது கணவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் சட்டப்படி திருமணம் முடிந்து முதல் மனைவி உயிருடன் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்து திருமண சட்டத்தின்படி முதல் மனைவி இருக்கும் போது நடைபெறும் இரண்டாவது திருமணம் செல்லாது என்பதால், அவர்களின் திருமணமே சட்டப்படி செல்லாத ஒன்றாக கருதப்படுகிறது. இந்த முக்கிய தகவலை மறைத்து நீதிமன்றத்தை ஏமாற்றி விவாகரத்து தீர்ப்பு பெற அந்த தம்பதியினர் திட்டமிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்த விவகாரத்தை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா கூறுகையில், ‘சட்டப்படி நடைபெறாத ஒரு திருமணத்தை நீதிமன்றம் விவாகரத்து மூலம் ரத்து செய்ய முடியாது’ என கூறி ஏற்கனவே வழங்கப்பட்ட விவாகரத்து தீர்ப்பை ரத்து செய்தார். மேலும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த வழக்கறிஞருக்கு கடும் எச்சரிக்கை விடுத்த நீதிபதி, ‘வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் அதிகாரிகளாக செயல்பட வேண்டுமே தவிர வாடிக்கையாளர்களின் முறைகேடுகளுக்கு துணை போகக் கூடாது’ என சாடினார். இதுபோன்ற கூட்டு சதி மூலம் நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது சட்ட அமைப்பையே அவமதிக்கும் செயல் என்றும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞரின் தொழில்முறை நடத்தை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார். நீதிபதி, ‘வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் அதிகாரிகளாக செயல்பட வேண்டுமே தவிர வாடிக்கையாளர்களின் முறைகேடுகளுக்கு துணை போகக் கூடாது’ என சாடினார்
