×

இயக்குனர் வீடு முன் துப்பாக்கி சூடு நடந்த நிலையில் நடிகர் ரன்வீர் சிங்குக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல்: வீட்டை சுற்றியும் போலீஸ் குவிப்பால் பரபரப்பு

 

மும்பை: மும்பையில் நடிகர் ரன்வீர் சிங்குக்கு மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்து பணம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல இயக்குனர் ரோகித் ஷெட்டி வீட்டின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜூகு பகுதியில் உள்ள அவரது வீட்டின் மீது 5 ரவுண்டுகள் சுடப்பட்டதில், கட்டிடத்தின் சுவர்களில் மூன்று ஓட்டைகள் விழுந்தன. இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் புனேவில் இருந்து கடத்தி வரப்பட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. பாலிவுட் திரையுலகையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தின் வடு மறைவதற்குள், தற்போது பிரபல நடிகர் ரன்வீர் சிங்குக்கும் இதே போன்ற மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் ரன்வீர் சிங்குக்கு வாட்ஸ்அப் மூலம் வந்த மர்ம குரல் பதிவில், ‘கோடிக்கணக்கில் பணம் தர வேண்டும்.

இல்லையெனில் கொலை செய்து விடுவோம்’ என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து அவர் மும்பை போலீசார் வசம் உடனடியாக புகார் அளித்தார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதிய ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதியினர், பாதுகாப்பு கருதி தங்கள் வீட்டின் முன்பு 6 ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களை நியமித்துள்ளனர். ஆனால், உரிய அனுமதி பெறாமல் துப்பாக்கி ஏந்திய நபர்கள் உடற்பயிற்சி கூடம் மற்றும் சிறுவர்கள் விளையாடும் இடங்களில் நடமாடுவதால் மற்ற குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். இதுதொடர்பாக மிரட்டல் விடுத்த மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மும்பையில் வசித்து வரும் சினிமா பிரபலங்களுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருவது, மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்குவது போன்ற சம்பவங்கள் திரைத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் கோவிந்தா வீட்டில் நுழைந்த மர்ம கும்பல்
மும்பையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பாலிவுட் மூத்த நடிகர் கோவிந்தாவின் வீட்டை சுமார் 23 பேர் கொண்ட மர்ம கும்பல் முற்றுகையிட்டு மொட்டை மாடி வழியாக உள்ளே நுழைய முயன்றது. உடனடியாக மும்பை போலீசாரை செல்போன் மூலம் அவர் தொடர்பு கொள்ள முயன்றும் அழைப்புகள் ஏற்கப்படாததால், பாதுகாப்பு கருதி தனது உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் வெளியே வந்து அந்த கும்பலை கோவிந்தா நேரடியாக எதிர்கொண்டார். மின்சாரத்தை சரி செய்ய வந்ததாக அந்த கும்பல் கூறியதை ஏற்க மறுத்த அவர், அவர்களை துப்பாக்கி முனையில் அங்கிருந்து விரட்டியடித்தார். இதுகுறித்து மேலாளர் சசி சின்கா கூறுகையில், ‘நடந்த சம்பவத்தை ஆதாரமாக காட்டியும், பாதுகாப்பு கருதி உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது, தற்போது இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதாரமாக உள்ள காணொளியை ஆய்வு செய்து வருகின்றனர்’ என தெரிவித்தார்.

Tags : Ranveer Singh ,WhatsApp ,Mumbai ,Rohit Shetty ,Mumbai, Maharashtra ,
× RELATED பூஜை செய்வதாக தனி அறையில் சிறுமியை...