×

பிரபல பிராண்ட் சோப் நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமனத்திற்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் போராட்டம்

 

பெங்களூரு: பிரபல பிராண்ட் சோப் நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனம் கடந்த 1916ம் ஆண்டு முதல் பாரம்பரியமிக்க மைசூர் சாண்டல் சோப்புகளை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தனது விற்பனையை வட மாநிலம் மற்றும் ஐரோப்பா, மேற்கு ஆசியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வரும் 2030ம் ஆண்டில் 5,000 கோடி ரூபாய் வருவாயை ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போதைய ஏற்றுமதி அளவான 25 முதல் 30 கோடி ரூபாயை இரண்டு மடங்காக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாஜக எம்பி கே.சுதாகர் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் கன்னட அமைப்பினர், கர்நாடக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் இந்த நிறுவனத்திற்கு ஏன் உள்ளூர் நடிகையான ரஷ்மிகா மந்தனா அல்லது நடிகர் ரிஷப் ஷெட்டியை தேர்வு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

இந்த எதிர்ப்புகளுக்கு இடையே, நடிகை தமன்னாவை 6.2 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு விளம்பர தூதராக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில், நவீன பொலிவுடன் கூடிய மைசூர் சாண்டல் சோப் மற்றும் 57 புதிய தயாரிப்புகளை தமன்னா அறிமுகம் செய்தார். இந்த நியமனம் குறித்து விளக்கம் அளித்த தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், ‘தமன்னாவிற்கு சமூக வலைதளங்களில் 3 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் இருப்பதால், வணிக ரீதியாகவே அவரைத் தேர்வு செய்தோம்’ என்று கூறினார்.

மேலும், ரஷ்மிகா மந்தனா மற்றும் தீபிகா படுகோன் போன்றவர்கள் ஏற்கனவே பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் இருப்பதால் அவர்களை தேர்வு செய்ய முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கான உற்பத்தி தேவையை பூர்த்தி செய்ய விஜயபுரா மற்றும் தாபஸ்பேட்டை ஆகிய இடங்களில் புதிய உற்பத்தி பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன.

Tags : Tamanna ,Karnataka ,Bangalore ,Karnataka Soap ,Detergent Company ,Mysore ,
× RELATED இந்தியாவின் ஜவுளித்துறையை வங்கதேசம்...