×

வித்தியாசமாக பந்து வீசும் பாகிஸ்தானின் உஸ்மான் தாரிக்கிற்கு தடை விதிக்க வேண்டும்: பீட்டர்சன், சேவாக் கருத்து

 

கொழும்பு: டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்பில் நேற்று நடந்த 12வது லீக் போட்டியில் ஏ பிரிவில் பாகிஸ்தான் அணி 32 ரன் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் கடந்த உலக கோப்பையில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக்கொண்டது. இந்த போட்டியில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்நிலையில் அவரின் பந்து வீச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விதிமுறைக்கு மாறாக பந்துவீசுவதால் ஐசிசி தடை விதிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் “இன்று(நேற்று) உஸ்மான் தாரிக் பந்து வீசுவதை நான் மிகவும் உன்னிப்பாகக் கவனித்தேன்.

அவர் பேட்ஸ்மேனைப் பார்த்து அசைவுக்கு ஏற்ப சிறிது நேரம் நின்று பந்தை வீசுவது தெளிவாகத் தெரிகிறது, இது சர்வதேச கிரிக்கெட்டில் சட்டப்பூர்வமானது அல்ல. அந்தபந்து வீச்சாளர் மீது ஐ.சி.சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார். இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் “சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோன்ற பந்து வீச்சாளர் பந்து வீசினால், ஒவ்வொரு தெரு குழந்தையும் பந்து வீச முடியும். இந்த பந்து வீச்சாளர் முதலில் பேட்ஸ்மேனைப் பார்த்துவிட்டு பின்னர் பந்தை விடுவிப்பதை பார்க்க முடிகிறது. இதுபற்றி ஐசிசி ஆய்வு செய்ய வேண்டும்,” என கூறி உள்ளார். இதனிடையே உஸ்மானின் பவுலிங் ஆக்‌ஷனை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Tags : Pakistan ,Usman Tharik ,Peterson ,Sewak ,Colombo ,United States ,Division ,T20 World Cup cricket ,World Cup ,
× RELATED டி20 உலகக் கோப்பையில் இரட்டை சூப்பர்...