கல்யாணி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில் பெங்கால் அணி, ஒரு இன்னிங்ஸ் 90 ரன் வித்தியாசத்தில் ஆந்திரா அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டிகள் கடந்த 6ம் தேதி முதல் நடந்து வந்தன. நேற்று முன்தினம் முடிந்த போட்டிகளில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறின. கல்யாணி நகரில் நடந்து வந்த மற்றொரு காலிறுதிப் போட்டியில் பெங்கால் – ஆந்திரா அணிகள் மோதின.
ஆந்திரா முதல் இன்னிங்சில் 295 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. அதற்கு பதிலடியாக களமிறங்கிய பெங்கால் அணியின் சுதீப் குமார் கராமி 299 ரன்கள் குவித்தார். மேலும் அந்த அணியின் ஹபிப் காந்தி 95, சுமந்த குப்தா 81 ரன்கள் விளாசினர். அதனால், பெங்கால் முதல் இன்னிங்சில் 629 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய ஆந்திரா அணி, கடைசி நாளான நேற்றைய ஆட்டத்தில் 244 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால், பெங்கால், ஒரு இன்னிங்ஸ் 90 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
