×

உலகக் கோப்பை 11வது போட்டி பத்து விக்கெட்டும் கையில் கெத்தாக வென்ற நியூசி: சென்னையில் டிம், ஆலன் வாணவேடிக்கை

 

சென்னை: உலகக் கோப்பை டி20 போட்டியில் நேற்று, ஐக்கிய அரபு எமிரேட்சை, 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அமர்க்களமாக வென்று அசத்தியது. சென்னையில், உலகக்கோப்பை டி20 தொடரின் 11வது போட்டி நேற்று நடந்தது. அதில் நியூசிலாந்து – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற எமிரேட்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய அந்த அணியின் துவக்க வீரர் ஆர்யன்ஸ் சர்மா 8 ரன்னில் வீழ்ந்தார். மற்றொரு துவக்க வீரரான கேப்டன் முகம்மது வாஸீம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 66 ரன் விளாசினார். பின் வந்த அலிசான் ஷரபு 55 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். 20 ஓவரில் எமிரேட்ஸ் அணி, 6 விக்கெட் இழந்து 173 ரன் எடுத்தது.

பின், 174 ரன் இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. துவக்கம் முதல் அடித்து ஆடிய நியூசிலாந்தின் டிம் செபர்ட், ஃபின் ஆலன் இணை, எமிரேட்ஸ் பந்து வீச்சாளர்களை திணறடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அவர்களை அவுட்டாக்க முடியாமலும், ரன்களை கட்டுப்படுத்த முடியாமலும் எமிரேட்ஸ் வீரர்கள் திணறினர்.

15.2 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 175 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியின் டிம் செபர்ட் 42 பந்துகளில் 3 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 89 ரன், ஆலன் 50 பந்துகளில் 5 சிக்சர் 5 பவுண்டரிகளுடன் 84 ரன் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகனாக டிம் செபர்ட் தேர்வு செய்யப்பட்டார்.

Tags : New Zealand ,World Cup ,Chennai ,Tim ,Alan Vanavedikkai ,World Cup T20 ,United ,Arab ,Emirates ,United… ,
× RELATED ரஞ்சி கோப்பை கிரிக்கெட் செமிபைனலில் பெங்கால்