×

நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுவதால் வங்கதேசத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: இரட்டை வாக்கு முறையால் புதிய திருப்பம்

டாக்கா: இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் புரட்சிக்குப் பிறகு, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவரது தலைமையிலான அவாமி லீக் கட்சித் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வங்கதேசத்தின் 13 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அரசின் நிர்வாக அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் ‘ஜூலை சாசனம்’ என்ற சீர்திருத்தத் தொகுப்பு குறித்த பொது வாக்கெடுப்பு ஒரே நேரத்தில் நடத்தப்பட உள்ளது.

வரும் 12ம் தேதி (நாளை மறுநாள்) காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வெள்ளை நிற வாக்குச் சீட்டும், சீர்திருத்தங்கள் குறித்த வாக்கெடுப்பிற்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச் சீட்டும் பயன்படுத்தப்பட உள்ளன. தாரிக் ரஹ்மான் தலைமையிலான தேசியவாத கட்சிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் தேசிய குடிமக்கள் கட்சி தலைமையிலான 11 கட்சிக் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரசாரம் இன்று (பிப். 10) காலை 7.30 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்கள் இறுதிக்கட்டமாக வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

சுமார் 127.7 மில்லியன் (12.77 கோடி) வாக்காளர்கள் பங்கேற்க உள்ள இந்தத் தேர்தலில், 51 பதிவு செய்யப்பட்ட கட்சிகளிலிருந்து 2,034 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தலைநகர் டாக்காவில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணிகளால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, சில இடங்களில் நள்ளிரவில் பணம் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரால் தேசியவாத கட்சி மற்றும் ஜமாத் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமைதியான முறையில் தேர்தலை நடத்த ஏதுவாக நேற்று முன்தினம் முதல் 14ம் தேதி வரை ராணுவம், போலீசார், அதிரடிப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை என ஆயிரக்கணக்கான வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும் 13ம் தேதி காலை வெளியாகும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags : Bangladesh ,Dhaka ,India ,Sheikh Hasina ,Awami League party ,MOHAMMED YUNUS ,
× RELATED சில பருப்பு வகைகள் நீக்கம்...