×

குன்னூர் அருகே வீட்டு முன்பு படுத்திருந்த நாயை கவ்வி இழுத்து சென்ற சிறுத்தையின் வீடியோ வைரல்

*கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

குன்னூர் : குன்னூர் அருகே ராணுவ பகுதியில் வீட்டு முன்பு படுத்திருந்த நாயை வேட்டையாடிய சிறுத்தையின் வீடியோ வைரலாகியுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டுமாடு, முள்ளம் பன்றி,கரடி, காட்டுப்பன்றி, மான்கள், காட்டாடு உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் வன விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் நுழைந்து விடுகின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குன்னூர் அருகே ராணுவ பகுதியில் வீட்டின் வெளியே படுத்திருந்த வளர்ப்பு நாயை,சிறுத்தை ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் கவ்விச் சென்றது. தொடர்ந்து நாயின் சத்தம் கேட்டு ஓடி வந்த அதன் உரிமையாளர் சத்தம் எழுப்பிய போது சிறுத்தை நாயை தூக்கி கொண்டு ராணுவ பகுதியில் உள்ள சாலையில் சென்றது.

இந்த காட்சியை தனது செல்போனில் தனி நபர் ஒருவர் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவத்தால் அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகளும், வாகன ஓட்டிகளும் பீதி அடைந்து உள்ளனர்.

குடியிருப்புக்குள் புகுந்த அந்த சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gunnar ,Neelgiri district ,
× RELATED தமிழகத்தில் பறவைக் காய்ச்சல்...