×

வேலூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்

*கலெக்டர், எம்எல்ஏக்கள் தொடங்கி வைத்தனர்

பள்ளிகொண்டா : சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு நவம்பர் 15ம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார். இந்த திட்டம் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ள போளிவாக்கம் ஊராட்சி அத்திக்குளம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு முதல் கட்டமாக காலை உணவு மட்டும் வழங்கும் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் சென்னை உள்பட 25 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள், 479 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1 லட்சத்து 29 ஆயிரத்து 689 தூய்மை பணியாளர்களுக்கு சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி 45 தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் அம்சா, ஒன்றிய செயலாளர் குமர பாண்டியன், பேரூராட்சி தலைவர் சுபபிரியாகுமரன், துணைத்தலைவர் வசீம் அக்ரம், செயல் அலுவலர் குமார்(பொறுப்பு), நகர செயலாளர் ஜாகீர் உசேன், வார்டு கவுன்சிலர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் வேலூர் மாநகராட்சியில் பணியாற்றும் 2,095 பேருக்கு காலை உணவு வழங்கும் திட்டம் வேலப்பாடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

கமிஷனர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 3வது மண்டல குழுத்தலைவர் யூசுப்கான், நகர்நல அலுவலர் பிரதாப், சுகாதார அலுவலர் முருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், தூய்மை பணியார்களுக்கு உணவு வழங்குவதற்கு டிபன் பாக்ஸ்களை வழங்கினார். தொடர்ந்து, தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுகளை எம்எல்ஏ, மேயர், கமிஷனர் ஆகியோர் பரிமாறினர். பின்னர், தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

திருவலம்: திருவலம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடந்தது. செயல் அலுவலர் கோபிநாதன் தலைமை வகித்தார். தலைவர் சாமுண்டீஸ்வரிரவி, துணைத்தலைவர் நேரு,வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைவர் சத்தியாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கினார்.

இதில், நகர செயலாளர் பெருமாள்ராஜா, இளநிலை உதவியாளர் தீபா, கவுன்சிலர்கள் ஜெயந்தி வெங்கடேசன், சிலம்பரசன், விஜயா கஜேந்திரன், லதா பூமிநாதன், மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம்: குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை எம்எல்ஏ அமலு விஜயன், நகர மன்ற தலைவர் சவுந்தர்ராஜன் தொடங்கி வைத்தனர்.

வேலூர் மாநகராட்சியில் 2,095 பேர் பயன்

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாநகராட்சியில் 2,095 தூய்மை பணியாளர்கள் உள்ளனர். காலையில் 2,075 பேரும், இரவு 20 பேரும் தூய்மை பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கான உணவு ஓரிடத்தில் தயாரித்து 6 வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு 54 இடங்களில் வழங்கப்பட உள்ளது. காலை உணவை காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

உணவு வகைகள்

தூய்மை பணியாளர்களுக்கு திங்கட்கிழமை காலை உணவாக இட்லி, சாம்பார், வடை, செவ்வாய்க்கிழமை ரவா கிச்சடி, கார சட்னி, புதன்கிழமை பொங்கல், சாம்பார், வியாழக்கிழமை ரவா கிச்சடி, தக்காளி சட்னி வழங்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை இட்லி, சாம்பார், வடை, சனிக்கிழமை ரவா பொங்கல், சாம்பார், ஞாயிற்றுக்கிழமை சேமியா கிச்சடி, சாம்பார் வழங்கப்படும். அதேபோல் இரவில் திங்கட்கிழமை இட்லி, கார சட்னி, செவ்வாய்க்கிழமை சப்பாத்தி வெஜிடபிள் குருமா, புதன்கிழமை ரவா கிச்சடி, சாம்பார், வியாழக்கிழமை சப்பாத்தி, மசாலா, வெள்ளிக்கிழமை இட்லி, காரசட்னி, சனிக்கிழமை ரவா உப்புமா சட்னி, ஞாயிற்றுக்கிழமை சப்பாத்தி குருமா வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vellore district ,Chief Minister ,M.K. Stalin ,Chennai Corporation ,
× RELATED 4,582 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கம்