சென்னை: அனைத்து சேவைகளுக்கும் ரயில் ஒன் செயலியை பயணிகள் பயன்படுத்தலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், சீசன் டிக்கெட், நடைமேடை டிக்கெட்டுகளை பெறலாம். பி.என்.ஆர். நிலை அறிதல், டிக்கெட் ரத்து உள்ளிட்ட வசதிகளும் ரயில் ஒன் செயலியில் இடம்பெற்றுள்ளன. ரயில் ஒன் செயலி இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில் மார்ச் 1ம் தேதி முதல் யூ.டி.எஸ். செயலி பயணிகள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும்.
கடந்த 2014ஆம் ஆண்டு ரயில் பயணிகளின் வசதிக்காக UTS செயலி அறிமுகம் செய்யப்பட்டது. ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட், பிளாட்ஃபார்ம் டிக்கெட் உள்ளிட்ட முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை இந்த செயலி வழியாக பயனர்கள் பெற்று வந்தனர். இந்த நிலையில், UTS செயலியின் அம்சங்களை உள்ளடக்கி ‘RailOne’ என்ற புதிய செயலி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட்டுக்கான யூ.டி.எஸ். செயலி வருகிற 1-ம் தேதி முதல் செயலிழக்கப்பட உள்ளது. அதாவது யூ.டி.எஸ். செயலி ஒவ்வொரு கட்டமாக செயலிழக்க செய்யப்பட உள்ளது. முதலில் புதிதாக சீசன் டிக்கெட் பெறுவது, சீசன் டிக்கெட் புதுப்பித்தல், புதிய பதிவு ஆகியன 1-ந் தேதிக்கு பின்னர் செய்ய முடியாது. தொடர்ந்து பிளாட்பாரம் டிக்கெட் பெறுவது. ஆர்-வாலட் என்று சொல்லப்படும் பதிவு செய்த பயணியின் கணக்கில் உள்ள தொகையை ரீ சார்ஜ் செய்வது ஆகியன நிறுத்தப்படும்.
படிப்படியாக மேற்கொள்ளப்படும் இந்த மாற்றங்கள் முழுமையடையும் வரை பிளே ஸ்டோரில் இந்த செயலி செயல்பாட்டில் இருக்கும். ஆர் வாலட்டை பொறுத்தமட்டில், மின்சார ரயில்கள், பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரயில்களில் தினமும் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக முன்கூட்டியே ஒரு குறிப்பிட்ட தொகையை பிரிபெய்ட் போல ரீ-சார்ஜ் செய்யும் வசதி கஉள்ளது. யூ.டி.எஸ். செயலி பயன்படுத்துபவர்கள் ரயில் ஒன் செயலிக்கு மாறும் போது அவர்கள் கணக்கில் உள்ள ஆர்-வாலட் தொகை அப்படியே இருக்கும். அந்த தொகையை பயணிகள் ரயில் ஒன் செயலியில் பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே அனைத்து பயணிகளும் ரயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
